அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில், வாழைப்பந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.
பார்வதிதேவி, ஈசனின் இடப்பாகம் பெற்றிட வேண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வரும் வழியில் ஓரிடத்தில் வாழைப்பந்தல் அமைத்தாள். அங்கு மணலில் இலிங்கம் பிடித்து வழிபட எண்ணினாள். அதற்கு நீர் தேவை. உடனே தனது பிள்ளைகளான முருகனையும், கணேசனையும் அழைத்து நீர் கொண்டு வரச் சொல்கிறாள். இருவரும் புறப்பட்டனர். வெகு நேரமாகிவிட்டது. பிள்ளைகள் வரவில்லை. அன்னையே தனது கைப்பிரம்பினால் பூமியைத் தட்டி ஓர் நீரூற்றினை ஏற்படுத்துகிறாள்.
அந்நீரினைக் கொண்டு மணல் லிங்கம் பிடித்து முடிக்கிறாள். அதன் பின்னரே கந்தனும், கணபதியும் ஆளுக்கொரு நதியோடு அன்னை முன் வந்து நின்றனர். அன்னை உண்டாக்கிய நதியோடு, மூன்று நதிகள் ஆயின. அம்மூன்று நதிகள் இங்கு கூடிடவே இவ்விடம் முக்கூட்டு என்று அழைக்கப்பட்டது. அன்னை சிவபூஜை செய்யும் வேளையில் அருகில் உள்ள கதலிவனத்தில் (வாழைத்தோப்பு) இருந்த அரக்கன் ஒருவன் இடையூறுகள் பல கொடுத்தான்!
அதையறிந்த சிவனும், திருமாலும் வாமுனி, செம்முனியாக அவதாரம் எடுத்து, அரக்கனை வதம் செய்தனர். பின்னர் அன்னை தனது சிவ வழிபாட்டினை முடித்துக்கொண்டு திருவண்ணாமலைக்குப் புறப்பட்டுச் சென்றாள். இவளே பச்சையம்மன் ஆனாள். பல இடங்களிலும் கோயில் கொண்டுள்ள பச்சையம்மனுக்கெல்லாம் வாழைப்பந்தல் பச்சையம்மனே முதன்மையானவள்.
பார்வதிதேவி, ஈசனின் இடபாகம் பெற்றிட வேண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வரும் வழியில், முதலில் கண்ட ஊர் முறுகப்பட்டு என்றும், பின்னர் கடைசியாகத் தங்கிப் பிரயாணப்பட்ட இடம் பிரயாணப்பட்டு என்றும் கூறப்படுகிறது. பிரயாணப்பட்டு தற்போது பெலாம்பட்டு என்று அழைக்கப்படுகிறது.
மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் அன்னை மணல் இலிங்கம் பிடித்த இடத்தில் தற்போது சுமார் நான்கடி உயரத்தில் கல் இலிங்கம் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாயிலில் சண்டனும் முண்டனும் வீற்றிருக்கின்றனர். அதற்கு வெளியே பிரமாண்டமான ரூபத்தில் சுதைவடிவில் வாமுனியும், செம்முனியும் அமர்ந்தபடி காட்சி தருகின்றனர்.
கோவிலினுள் துவார கணபதியும், தேவேந்திரனும் நம்மை வரவேற்கின்றனர். ஜடாமுனியும் உடனுள்ளார். இங்கு சிவபெருமான் மன்னார் சுவாமியாக அம்மனின் சன்னதிக்கு வெளியே வலப்பக்கம் சன்னதி கொண்டுள்ளார். இங்கே துவார பாலகர்கள் சிவன், திருமால் வடிவமாக வீற்றுள்ளனர். கருவறையுள் சுதை வடிவில் அம்பிகை பச்சைத் திருமேனியளாய் அருட்காட்சி தருகிறாள். இவள் சன்னதியில் பக்தர்களுக்கு பச்சைநிறக் குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
ஆலயத்தைச் சுற்றிலும் சமதக்கனி முனிவர், அஷ்ட விக்னேசுவரர்கள், நமவீரர்கள், சப்தமுனிகள் எனப் பலரும் அம்பாளை நோக்கித் தவம் புரிந்து கொண்டிருக்கின்றனர். வில்வமரமும், வேப்பமரமும் இணைந்து வளர்ந்துள்ளது.
திருவிழா: ஆடி திங்கட்கிழமை:
பொதுவாக சிவனுக்கு திங்கட்கிழமையும், அம்மனுக்கு ஆடி வெள்ளியும் உகந்ததாகும். ஆனால் இத்தலத்தில் ஆடி திங்கட்கிழமைகளில் விழா கொண்டாடப்படுவது சிறப்பு. இதை சோமவார விழா என அழைக்கின்றனர்.
பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.