டில்லி

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தை அரசியல் பகை காரணமாகச் சிறையில் அடைக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் ஐ என் எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகளைத் திரட்ட விதிமுறைகளை மீறி சலுகை அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.   அதையொட்டி அவர் சிபிஐ யால் கைது செய்யப்பட்டார்.  சிபிஐ விசாரணை முடிவடைந்த  பிறகும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாமல் உள்ளது.

கடந்த 2010 ஆம் வருடம் அப்போதைய உள்துறை அமைச்சராக ப சிதம்பரம் இருந்த போது அமித் ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  சோஹ்ராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா சிறையில் கழித்தார். குஜராத்திலிருந்து விலகி இருக்க அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.   அதற்காகச் சிதம்பரம் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம்  அமித் ஷா, “ப சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, ​​சிபிஐ அவருக்குக் கீழ் இல்லை. இப்போது நான் உள்துறை அமைச்சராக இருக்கிறேன், இப்போதும் சிபிஐ எனக்குக் கீழ் இல்லை,   தவிர நான் ஊழல் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்படவில்லை, ஒரு போலி என்கவுண்டர் மீது நான் குற்றம் சாட்டப்பட்டேன்

அதற்குப் பின்னர், நீதிமன்றம் என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்தது.  குற்றச்சாட்டுகளில் இருந்து நான் விடுவிக்கப்படவில்லை. இரண்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளது  இது ஒரு போலி வழக்கு என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வெளி வந்தனர்.

எனது வழக்கு மற்றும் சிதம்பரம் மீதான வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளுக்கும் இடையில் எந்தவிதமான இணக்கமும் இல்லை.   கடந்த ஐந்து மாதங்களாக எனது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த விசாரணை ஐந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது

தற்போது தான் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவது தவறு. அவர் நிரபராதி என்று அவர் நினைத்தால், அவர் தனது வழக்கை நீதிமன்றத்தில் முன்வைக்க முடியும்” என்று அமித் ஷா கூறினார்.