சென்னை: ஆக்சிஜன் தயாராக இருப்பதை உறுதி செய்யுங்கள் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிபிபில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று 8,963 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 6,25,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதுபோன்ற நிலை இப்போதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மத்தியஅரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கொரோனா 3வது அலை ஏற்பட கூடும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளதால்,   மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவைகளை தயாராக வைத்திருக்கும்படி மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், அனைத்து மருத்துவமனைகளும் தற்போதுள்ள கைவசம் உள்ள ஆக்சிஜன் சிகிச்சை மற்றும் சேவைகளை உடனே மதிப்பிட வேண்டும். மருத்துவமனையின் உள்கட்டமைப்பை ஆராய்ந்து, திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பும் வசதி, வினியோகம் தங்கு தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் (உள்நோயாளிகள் பிரிவில்) 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர், அதனை மீண்டும் நிரப்புவதற்கான அமைப்பு குறித்து ஆராய வேண்டும். வென்டிலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.