2021 சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி!

புதிய நீதிக்கட்சி என்ற பெயரில், ஒரு கட்சியை பல்லாண்டுகளாக நடத்தி வருகிறார் ஏ.சி.சண்முகம். இவர், முந்தைய காலங்களில் அதிமுக உறுப்பினராக இருந்தபோது, நாடாளுமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் வென்றுள்ளார்.

ஆனால், புதிய நீதிக்கட்சி என்ற ஒரு தனிக்கட்சியைத் துவங்கிய பிறகு, இவருக்கும் தேர்தல் வெற்றிக்கு செட்டாகவில்லை.

கடந்த 2001ம் ஆண்டு திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியடைந்தார். அதன்பிறகான இவரின் அரசியல் முயற்சிகள் வெற்றியடையவில்லை. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் இணைந்து, தாமரைச் சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு, திமுகவை பின்னுக்குத் தள்ளி, இரண்டாமிடம் வந்து அசத்தினார்.

அதன்பிறகு, 2019 தேர்தலில், அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து, வேலூர் தொகுதியில் களமிறங்கினார். தொகுதியில், கரன்சிகளை இவர் கணக்கில்லாமல் அள்ளிவீச, திடீரென அத்தொகுதியில் தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம். இதனால், வேதனையில் குலுங்கி அழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பின்னர், சிறிது நாட்கள் கழித்து நடைபெற்ற வேலூர் மக்களவை தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட இவர், எப்படியும் வென்று விடுவது என்று கங்கணம் கட்டினார்.

அவரின் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும் வகையிலேயே, தொடக்க நிலை வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் இருந்தன. ஆனால், கடைசியில் வெறும் 8000+ வாக்குகளில் தோல்வியடைந்து வெறுத்துப் போனார் சண்முகம்.

அதற்கு காரணம், வாக்குப்பதிவு நாளன்று, நாடாளுமன்றத்தில், பாஜக, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்யும் சட்டத்தைக் கொண்டு வந்தது. முஸ்லீம்கள் அதிகம் நிறைந்த வேலூர் மக்களவைத் தொகுதியில் இது விளைவை ஏற்படுத்தியது. மேலும், முத்தலாக் உள்ளிட்ட வேறுசில விவகாரங்களும் சேர்ந்து கொண்டன. இதை, சண்முகமும் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

தற்போது, அதிமுக கூட்டணியில் இணைந்து, தன் கட்சி சார்பாக சட்டமன்ற தேர்தலில் சில தொகுதிகளை வெல்லலாம் என்று கணக்குப் போட்டார். ஆனால், அவர் ஆசையில் அதிமுகவின் இரட்டைத் தலைமை மண் அள்ளிப் போட்டுவிட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கியதும் பயனளிக்காமல் போய்விட்டது. தற்போது, புதிய நீதிக்கட்சி தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார் சண்முகம்.

இவரைப் போன்றே தனிக்கட்சி கண்ட கல்வித் தந்தை பச்சைமுத்து, மக்களவை உறுப்பினராகி விட்டார்!

ஆனால், இவர் தனிக்கட்சி கண்ட காலம் முதல், அக்கட்சி சார்பாக ஒரு சட்டமன்ற உறுப்பினரையோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரையோ வெல்ல முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது.