கரன்பூர்

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானால் இஸ்லாமியர்கள் தெருக்களில் இறங்கி போராடுவார் என அசாதுதீன் ஓவைசி எச்சரித்துள்ளார்.

அடுத்த வருடத் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தங்கள் பிரசாரத்தைத் தொடக்கி உள்ளனர்.  அவ்வகையில் அகில் இந்திய இத்தஹாதுல் முஸ்லிம் கட்சி என்னும் இஸ்லாமியக் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பிரசாரம் செய்து வருகிறார்.

உபி மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள நகரங்களில் ஒன்றான சகரன்பூரில் நடந்த  பிரசாரக் கூட்டத்தில் ஓவைசி, “பாஜகவின் மத்திய அரசின் புதிய சட்டங்களான தேசிய குடியுரிமை பதிவேடு,  குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றை அமல்படுத்த முயன்றால் தெருக்களில் இறங்கி முஸ்லிம்கள் போராடுவார்கள்.

சகரன்பூர் முஸ்லிம் உலமாக்களின் நிலமாகும்.  இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக முஸ்லிம்களும் தம் ரத்தம் சிந்தியுள்ளனர்.  இதற்குப் பிறகும் முஸ்லிம்கள் என்பவர்கள் வெறும் வாக்குவங்கிகள் எனக் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட இதர அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

இஸ்லாமியர்கள் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பிறகும் அவர்களுக்காகக் கல்வி நிலையங்களும், அவர்கள் பெண் பிள்ளைகளுக்கானக் கல்வியும் அளிக்கப்படவில்லை.   அண்மையில் முன்னாள் முதல்வர் அகிலேஷ்சிங் யாதவ் சகரன்பூரில் பொதுக்கூட்டம் நடத்தினார். அவரது கட்சியின் மேடையில் ஒரு முஸ்லிம் தலைவர் கூட இடம்பெறவில்லை.

முசாபர் நகரில் சமாஜ்வாதி ஆட்சியில் மதக்கலவரம் நடந்த போது அதன் முதல்வர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான சிபய் கிராமத்தின் கொண்டாட்டத்தில் இருந்தார்.  இந்தக் கலவரத்தில், முஸ்லிம்களில் பலரும் கொல்லப்பட்டதுடன் அவர்களில் சுமார் ஐம்பதாயிரம் பேர் வீடுகளை இழந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.