டில்லி

சுமார் 40% க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் ஜி எஸ் டி வரி விதிப்பின் கீழ் வரி செலுத்தவில்லை.

கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி ஜி எஸ் டி அமுலாக்கப்பட்டது.   ஜூலை மாதத்தின் ஜி எஸ் டி கணக்கு தொழில் முனைவோர் மற்றும் வணிகர்களால் கவுன்சிலுக்கு அளிக்கப்பட்டுள்ளது.    அந்த கணக்கின்படி சுமார் 54 லட்சம் பேர் கணக்கு அளித்துள்ளனர்.  அந்த 54 லட்சம் பேரும் சுமார் 22 லட்சம் பேர் அதாவது 40% ஜி எஸ் டி கட்டவில்லை.    அவர்கள் கொடுத்துள்ள கணக்கின் படி அவர்கள் ஜி எஸ் டி எதுவும் கட்டத் தேவை இல்லாததால் எதுவும் கட்டவில்லை.

மீதமுள்ள 32 லட்சம் தொழில் முனைவோரும் வணிகர்களும் ஏற்கனவே கட்டியுள்ள வரியின் காரணமாக மிகக் குறைந்த ஜி எஸ் டி வரிவிதிப்பின் கீழ் வருகின்றனர்.  அதாவது அவர்கள் தற்போது கட்டிய வரியானது அவர்கள் ஏற்கனவே செலுத்தியுள்ள வரியைக் காட்டிலும் குறைவாகவும்,  சிலருக்கு மிகக் குறைந்த அளவே அதிகமாகவும் உள்ளது.   தற்போது அவர்கள் வரியை செலுத்தி இருந்தாலும் அவர்களுக்கு அந்தத் தொகை திரும்பக் கிடைத்து விடும்.

அரசு ஜி எஸ் டி மூலம் ரூ.94000 கோடி வசூலித்ததாக குறிப்பிட்டுள்ளது.   ஆனால் கணக்குகளை சரிபார்த்து முடியும் போது திருப்பிக் கொடுக்கப்பட்ட தொகை போக மீதம் உள்ள தொகை மிகக் குறைவாகவே இருக்கும் என தெரிய வருகிறது.