2022 – 23 ம் கல்வி ஆண்டில் மட்டும் 12,53,019 மாணவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்ட விவரங்கள் அடிப்படையில் 6,97,121 ஆண்கள் 5,55,854 பெண்கள் மற்றும் , 44 மூன்றாம் பாலினத்தவர் பள்ளிப் படிப்பை தொடரவில்லை என்று தெரிவித்துள்ளது.

இதில் 9,30,531 பேர் எட்டாம் வகுப்புடனும் 3,22,488 மாணவர்கள் 9 முதல் 12 ம் வகுப்பிலும் இடைநின்றிருப்பதாக கூறியுள்ளது.

இடைநிலைப் பள்ளியில் (6 முதல் 14 வயது வரை) இடைநிற்றல் தரவுகளின் படி உத்தர பிரதேசத்தில் 3,96,655, பீகார் 1,34,252, குஜராத் 1,06,885, அசாம் 80,739, ஹரியானா 22,841 மற்றும் தமிழ்நாடு 20,352 மாணவர்கள் பள்ளிப் படிப்பை கைவிட்டுள்ளனர்.

14 முதல் 18 வயது வரையிலான மேல்நிலைப் பள்ளியில் இடைநிற்றல் விவரம் : ம.பி. 84,788 ஒடிசா 54,634 அசாம் 48,795 குஜராத் 36,522 மற்றும் ஆந்திர பிரதேஷ் 20,443

இந்த குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வர அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளித்த சர்க்கார், “பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையானது சமக்ரா சிக்ஷா என்ற பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மத்திய நிதியுதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இலவச சீருடைகள், இலவச பாடப்புத்தகங்கள், போக்குவரத்து உதவித்தொகை மற்றும் சேர்க்கை மற்றும் தக்கவைப்பு இயக்கங்களை இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதி உதவியைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

தவிர, 2021-22 முதல், NIOS/SIOS மூலம் கல்வியை முடிப்பதற்காக, 16-19 வயதுக்குட்பட்ட பள்ளிக் கல்வியை கைவிட்ட சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடப் பொருட்கள் மற்றும் சான்றிதழ் பெறுவதற்காக ஆண்டுக்கு ₹2000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிலையங்களில் வழங்கப்பட்டு வந்த பாடப்புத்தகம், சீருடை உள்ளிட்டவற்றுக்கான உதவித் தொகை நிறுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.