ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐபிஎஸ் அந்தஸ்துள்ள அதிகாரிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாத ஒரு மர்மமான நிலை நிலவி வருகிறது.

வெளியாட்கள் யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், அருணாச்சாலப் பிரதேசம், கோவா மற்றும் மிசோரம் ஆகிய மாநில கேடர்களைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் காஷ்மீரின் உள்ளூர் பணிகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர், மத்திய அரசுப் பணிகளைத் தவிர, காஷ்மீரின் உள் மாநிலப் பணிகளுக்கு அந்த மாநில கேடர் அதிகாரிகளை மட்டுமே நியமிக்க முடியும். வெளிமாநில கேடர் அதிகாரிகளை நியமனம் செய்ய முடியாது. தற்போது 370 பிரிவு நீக்கப்பட்ட நிலையில் புதிய நடைமுறை ஏற்பட்டுள்ளது.