மும்பை: மராட்டிய மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும், பாரதீய ஜனதா – சிவசேனை இடையே இன்னும் தொகுதி உடன்பாட்டு விபரங்கள் அறிவிக்கப்படாமல் இழுபறி நிலவுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தல் தொகுதி உடன்பாட்டின்போதே சடடசபையில் பாதிக்குப் பாதி தொகுதிகளில் இருகட்சிகளும் போட்டியிட வேண்டும் என்று உடன்பாடு எட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது நிலைமை வேறாக உள்ளது.

தனித்து தனிப்பெரும்பான்மை பெறும் வகையிலான எண்ணிக்கையில் போட்டியிட வேண்டுமென பா.ஜ. விரும்புகிறது. ஆனால், சிவசேனை இந்த விஷயத்தில் விட்டுத்தர தயாராக இல்லை. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வகிக்கவும் அந்தக் கட்சி விரும்புகிறது.

ஆனால், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்துகொள்ள பாரதீய ஜனதா விரும்பவில்லை. வேண்டுமானால் துணை முதல்வர் பதவியை அளிக்க விரும்புகிறது. ஆனால், அந்த துணை முதல்வர் பதவியை சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யா தாக்கரேவுக்காக கேட்கிறார்.

ஆனால், அப்படி விட்டுக்கொடுத்து விட்டால், சிவசேனை பெரிதாக வளர்ந்து தம்மை விஞ்சிவிடும் என்று பா.ஜ. அஞ்சுகிறது. அப்படி ஆதித்யாவுக்கு விட்டுக்கொடுப்பதாக இருந்தால் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது.

எனவே, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும் கூட்டணி தொடருமா? அல்லது முறியுமா? என்ற குழப்ப நிலையே நீடிக்கிறது.