மாஸ்க்’ அணியாத மணமகன்.. ஐம்பதாயிரம் அபராதம்..

ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் பகுதியில் உள்ள ஓட்டலில், பிரபல தொழில் அதிபர் மகனின் திருமணம் நடைபெற்றது.

மாப்பிள்ளை ஊர்வலத்தில், விதிகளை மீறி 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அலங்கரிக்கப்பட்ட காரில் அழைத்து வரப்பட்ட மணமகன் ‘மாஸ்க்’ ஏதும் அணியாமல் ஆட்டம் போட்டபடி வந்துள்ளார்.

ஊர்வலத்தில் பங்கேற்ற விருந்தினர்களும் ‘மாஸ்க்’ அணியாததோடு, ஒருவர் கையை மற்றொருவர் பிடித்த படி ஆட்டம் போட்டுள்ளனர்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நடந்த இந்த ஊர்வலம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து போலீசார் மணமகன் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்துள்ளனர்.ஊர்வலத்தில் வந்த இரு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

திருமணம் நடந்த ஓட்டலை மாவட்ட ஆட்சியர் ‘சீல்’ வைத்துள்ளார்.

விதிகளை மீறி திருமணம் செய்த மணமகனுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்த திருமண ஊர்வல காட்சிகள் வெளியாகிப் பரபரப்பானதால் ஒடிசா முதல் –அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்’’ கொரோனா ஒழிப்பில் நெருக்கடியான கட்டத்தில்  இருக்கிறோம்.எனவே இதுபோன்று விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பா.பாரதி