மீபத்தில் வெளியாக பல தரப்பினரின் பாராட்டுதல்களோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “ஜோக்கர்”
இந்தப் படத்தில் தன்னைத்தானே “(மக்கள்)  ஜனாதிபதி”யாக அறிவித்து, சமூக அநீதிகளை தட்டிக்கேட்பார் கதாநாயகன். இந்த கதாபாத்திரம், மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.
“ஜோக்கர்” பட நாயகன், தன்னை மக்கள் ஜனாதிபதி என்று சொல்லிக்கொள்வதைப்போல, நிஜத்திலும் ஒருவர் தன்னை அப்படிச் சொல்லிக்கொள்வார்.

செந்தமிழ்க்கிழார்
செந்தமிழ்க்கிழார்

அவர் பெயர் செந்தமிழ்க்கிழார். சட்டப்படிப்பு  படிக்காதவர் இவர். ஆனால் சட்ட புத்தகங்களை கரைத்துக்குடித்தவர். சட்டம் குறித்து நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
“நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்”, “சொந்த ஜாமீன் பெறுவது எப்படி” என்பவையும் அடக்கம்.
தன்னைத்தானே “இந்தியாவின் ஜனாதிபதி”யாகவும், “தலைமை நீதிபதி”யாகவும் நியமித்துக்கொண்டார்.
அதுமட்டுமல்ல.. மக்கள் காவல் நிலையங்கள் என்று பல இடங்களில் அமைத்தார். அதாவது இவர் நியமித்த இன்ஸ்பெக்டர்கள்(!) இருப்பார்கள். தவறுகள் நடந்தால் தட்டிக்கேட்பார்கள்.
இவரது விசிட்டிங் கார்டு எப்படி இருக்கும் தெரியுமா?
சம்பளம் வாங்காதவர்கள் நடத்தும் தனி சர்க்கார், செந்தமிழ்க்கிழார் ஆறாம் வகுப்பு தற்காலிக தலைவர், பாதிக்கப்பட்டோர் கழகத்தின் தற்காலிக ஆசிரியர், நீதியை தேடி மற்றும் சிறப்பு நீதிமன்றத்தின் தலைவர், அரும்பாக்கம்’ –
கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம், போலி நீதிமன்றம் நடத்தியதாகவும், போலி காவல் நிலையம் நடத்தியதாகவும் கைது செய்யப்பட்டார் செந்தமிழ்க்கிழார். அவரோடு அவரது இயக்கத்தைச் சேர்ந்த லூர்துசாமி, செழியன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.
download
இவர்களது கைது குறித்து காவல் துறை சொன்னது இதுதான்:
“செந்தமிழ்க்கிழார் கட்டப்பஞ்சாயத்து செய்துவந்தார்.  எதிர் தரப்பினருக்கு எழுதும் கடிதத்தின், அனுப்புனர் முகவரியில், “சம்பளம் வாங்காதவர்கள் நடத்தும் தனி சர்க்கார், செந்தமிழ்க்கிழார் ஆறாம் வகுப்பு தற்காலிக தலைவர், பாதிக்கப்பட்டோர் கழகத்தின் தற்காலிக ஆசிரியர், நீதியை தேடி மற்றும் சிறப்பு நீதிமன்றத்தின் தலைவர், அரும்பாக்கம்’ என்று குறிப்பிட்டு வந்துள்ளார்.
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என பலரையும் இழிவுபடுத்தி கடிதம் எழுதியுள்ளார். அரசால் பதிவு செய்யப்படாத போலி அமைப்புக்களை நடத்தும் செந்தமிழ்க்கிழார், தன்னுடைய அமைப்பிற்கு தானே அகில இந்திய நீதிபதி என்றும், தன்னுடைய அமைப்பில் வேலை பார்ப்பவர்களுக்கு, மக்கள் போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர், உதவி கண்காணிப்பாளர் போன்ற பதவிகளை கொடுத்துள்ளார். இந்த அமைப்பைச் சேர்ந்த லூர்துசாமி, தனது விசிட்டிங் கார்டில், “நீதியை தேடி’ என்ற பத்திரிகையின் ரிப்போர்ட்டர் என்றும், வேளச்சேரி மக்கள் போலீஸ் ஸ்டேஷன் என்ற அமைப்பின் இன்ஸ்பெக்டர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு செழியன் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.
இவர்கள் நாளிதழ்களில் வரும் செய்திகளை படித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று, தாங்கள் தனி தண்டனை சட்டம், தனி நீதிமன்றம் மற்றும் தனி அரசாங்கம் நடத்துகிறோம் என்று கூறி அவர்களை தங்கள் வசம் இழுத்துக் கொள்வர்.
இயக்குநர் ராஜூமுருகன்
இயக்குநர் ராஜூமுருகன்

பின், எதிர் தரப்பினரிடம் சென்று பணம் கேட்டு மிரட்டுவது வழக்கம். அவர்கள் தர மறுத்தால், “பாதிக்கப்பட்டோர் கழகம் மூலம் தண்டிக்கப்படுவீர்கள்; பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் உங்களை பற்றி அவதூறாக செய்தி வெளியிடுவோம்; எங்கள் மக்கள் நீதிமன்றத்தில் உங்களுக்கு தண்டனை வழங்கப்படும்’ என்று கூறி எதிர்தரப்பினரை மிரட்டி வந்துள்ளனர்.போஸ்கோ கொடுத்த புகாரின்படி, விசாரணை நடத்திய போது, இந்த பொய்யான அமைப்புகள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலி அமைப்பு மூலம் கட்டப்பஞ்சாயத்து நடத்தி வந்த செந்தமிழ்க்கிழார், லூர்துசாமி ஆகிய இருவரும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய கம்ப்யூட்டர் கடிதங்கள், அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று காவல்துறை தெரிவித்தது.
ஆனால் செந்தமிழ்கிழாரை அறிந்தவர்கள், “நாட்டில் சட்டம் சீர்கெட்டு கிடப்பதைப் பார்த்து கொதித்துப்போய்த்தான், அவன் தன்னைத்தானே இந்திய ஜனாதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் நியமித்துக்கொண்டார். மக்கள் காவல் நிலையங்களையும் அமைத்தார். அவரது செயல்பாடு அதிகார வர்க்கத்துக்குப் பிடிக்காததால், அவரை ஒடுக்குகிறார்கள்” என்கிறார்கள்.
ஆனால் இவர், “ஜோக்கர்” படத்தில் வருவது போல, தனது இருசக்கரவாகனத்தில் வெண்கொற்ற(!)குடை வைத்திருக்கவில்லை.
ஆனால் அப்படி ஒருவர் தஞ்சையில் இருந்தார். இவரும் சமுதாய ஆர்வலர்தான். தன்னை “சோழ மன்னன் கனக மகாராஜா ” என்று சொல்லிக்கொள்வார்.
ஜோக்கர் படத்தில் வருவது போலவே தனது இரு சக்கரவாகனத்தின் மேலே குடை போன்று அமைத்து தஞ்சை நகரை வலம் வந்தார்.
உளளாட்சி தேர்தலில் இருந்து, பாராளுமன்றத் தேர்தல் வரை சுயேட்சையாக நிற்பார்.
“நான் வெற்றி பெற்றால் இந்த உலகத்தில் வறுமையை ஒழிப்பேன். எல்லா நாடுகளையும் இணைத்து ஒரே நாடாக்குவேன். அப்படிச் செய்யும்போது, தேவையில்லாமல் ராணுவத்துக்கு பல லட்சம் கோடி செலவு செய்ய வேண்டியதில்லை. அந்த பணத்தைக்கொண்டு உலகில் ஏழ்மையை முற்றிலும் ஒழிப்பேன்” என்று பிரச்சாரம் செய்வார்.
மக்கள் அவரை ஜோக்கராகத்தான் பார்த்தார்கள்.
செந்தமிழ்கிழார் வாழ்க்கையையும், தஞ்சை ராஜராஜன்(!) குடையையும்தான்,  ஜோக்கர் பட கதாபாத்திரம் உருவாக இயக்குநர் ராஜூமுருகனுக்கு இன்ஸ்ப்ரேஷன்.
அதோடு, தனது சமுதாய சிந்தனைகளை இணைத்து, சிறப்பான கதாபாத்திரமாக உருவாக்கிவிட்டார்.