சென்னை: பொதுமக்கள் இனிமேல் சொத்துக்களை பத்திரப் பதிவு செய்ய ‘அசல்’ ஆவணங்கள் கட்டாயம் என்ற தமிழக அரசின் மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலம் ஆக்கிரமிப்பு, போலி ஆவணங்கள் மூலம் சொத்து பதிவு போன்ற ஏராளமான வழக்குகளை விசாரித்த நீதிமன்றங்கள், அதை தடுக்கும் வகையில் பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பத்திர பதிவு செய்வதில் சில மாற்றங்களை அறிவித்தது. அதன்படி, பத்திரப்பதிவு துறை, ஒருவர் பத்திரப்பதிவு செய்யும் போது, அதன் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று விதியை வகுத்து அதனை பின்பற்றி வந்தது.
இது சட்டமாக இல்லாத நிலை தொடர்ந்த வந்தது. ‘ இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த விதியை ரத்து செய்தது. அதனால் அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பத்திரப்பதிவு செய்யும் சூழ்நிலை உருவானது.
இதையடுத்து, தமிழக அரசு, அசல் ஆவணம் கட்டாயம் என்ற பதிவுத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது. கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக, அந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த மசோதாவுக்கு ஜனவரி 9-ந்தேதி ஜனாதிபதி முர்மு, ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து இந்த சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
பத்திரப் பதிவு மசோதாவில் என்ன உள்ளது?
ஒருவர் ஒரு சொத்தைப் பத்திரப் பதிவு செய்யும்போது, அதன் அசல் ஆவணங்களைக் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட அந்தச் சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து அதற்கு மூலப்பத்திரம் இல்லையென்றால், அதற்கான வருவாய்த் துறையின் பட்டாவைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை அந்தச் சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்ற நபரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அந்தச் சான்றை பத்திரப் பதிவின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
சொத்தின் அசல் ஆவணம் தொலைந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அந்தச் சூழலில், இது சம்பந்தமாக காவல்துறையில் புகாரளித்து, ‘ஆவணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்கிற சான்றிதழைப் பெற வேண்டும்.
கூடுதலாக, ஆவணம் காணாமல் போனது சம்பந்தமாக உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து, அதன் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]