காதலுக்கு கை கொடுத்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை… பாலகிருஷ்ணன் முகநூல் பதிவு

2018ம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ‘கை’ மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஸ்டாலின் மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை தலைமைப் பேராசிரியர் டாக்டர் வி. ரமாதேவி தலைமையில் 75 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு 13 மணி நேரம் மேற்கொண்ட தொடர் அறுவை சிகிச்சை மூலம் நாராயணசாமி என்ற இளைஞருக்கு கை மட்டுமல்ல அவரது காதலும் கைகூடியது.

2011ம் ஆண்டு கை மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி பெற்றிருந்த போதும் 2018ம் ஆண்டு நடைபெற்ற இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தான் ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற முதல் கை மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.

2009ல் பழனியில் ஒரு திருமண வீட்டில் சந்தித்துக் கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணசாமியும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதியும் காதல் வயப்பட்டனர்.

கொத்தனார் வேலை செய்து வந்த திண்டுக்கல் நாராயணசாமியுடனான காதலை ஆறு ஆண்டுகளாக தனது மனதுக்குள் பூட்டி வைத்திருந்த ரேவதியின் பெற்றோருக்கு இது தெரியவர ஆரம்பத்தில் கண்டித்த அவர்கள் பிறகு வேறு வழியின்றி ஏற்றுக்கொண்ட நிலையில் கட்டிட வேலையின் போது மின்சாரம் தாக்கி தனது இரண்டு கைகளையும் இழந்தார் நாராயணசாமி.

அப்போது தான் மனமிறங்கிய ரேவதியின் பெற்றோருக்கு தங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கேள்வி வர திருமணம் செய்துவைக்க மனமில்லாமல் நாட்களை கடத்தி வந்தனர்.

அதற்குள்ளாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்து கேள்விப்பட்ட நாராயணசாமி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்து மருத்துவரிடம் தனது காதலுக்கு உதவ கை கொடுக்க வேண்டும் என்று கெஞ்சினார்.

ஒராண்டு தேடலுக்குப் பின் மூளைச் சாவடைந்த மணலியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் கைகளை இவருக்கு பொருத்த முடிவெடுக்கப்பட்டதை அடுத்து மருத்துவர் ரமாதேவி தலைமையிலான மருத்துவர்கள் அதனை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

புற உறுப்புகளை தானமாக அளித்தால் இறுதிச்சடங்கின் போது சங்கடமாக இருக்கும் என்று வெளிப்புற உறுப்புகளை யாரும் தானமாக தர முன்வருவதில்லை அதுவரை உள் உறுப்புகளை மட்டுமே தானமாக வழங்கி வந்த நிலையில் முதல் முறையாக புற உறுப்பு தானம் வழங்கப்பட்டதை அடுத்து மூளைச்சாவடைந்த வெங்கடேசனின் கைக்கு பதிலாக செயற்கை கை பொருத்தப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இரண்டு கைகளையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்றுக்கொண்ட நாராயணசாமி ஓராண்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வீடு திரும்பிய பின் 10 ஆண்டுகளாக தான் காதலித்த நதியாவை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு ஆண் குழந்தைக்கும் தந்தையாகி உள்ளார்.

படிப்படியாக உடல்நிலை தேறி வந்த நாராயணசாமி தனக்கு பொருத்தப்பட்ட கைகள் மூலம் பேனா பிடித்து எழுதுமளவுக்கு வந்திருக்கும் நிலையில் சிகிச்சைக்குப் பிறகு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கருணை அடைப்படையில் வார்டு மேலாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.

மூளைச்சாவடைந்த ஒருவரின் உடல் உறுப்பு தானம் காதலுக்கு மட்டுமல்ல 10 பேரை உயிர்த்தெழ உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.