சென்னை

ரசு மருத்துவமனைகளில் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.

தானங்களில் மிகவும் சிறப்பான தானமாகக் கருதப்படுவது உடல் உறுப்பு தானமாகும்   ஏனெனில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பல நோயாளிகள் இறப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.   மூளைச்சாவு அடைந்து இனி பிழைக்க வழி இல்லாதோரிடம் இருந்து அவர்களின் உறவினர்கள் ஒப்புதலுடன் உடல் உறுப்புக்கள் தானமாகப் பெற்று நோயாளிகளுக்கு பொருத்தப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன.  மிகவும் அவசரமான நேரத்தில் மட்டும் இந்த சிகிச்சைகள் நடத்தப்பட்டன.   எனவே உடல் உறுப்புக்கள் மாற்ற தங்கள் பெயரைக் கொடுத்து விட்டுக் காத்திருப்போர் பட்டியல் மிகவும் நீண்டது.   தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

இதையொட்டி பல அரசு மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த சிகிச்சை முதலில் தொடங்கப்பட்டுள்ளது.    பலரும் காத்திருப்பதால் இந்த பணி மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.

தற்போது சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் சுமார் 3000 பேர் காத்திருக்கின்றனர்.  இதில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் 1800 பேர் உள்ளனர்.  இவர்கள் அனைவரும் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகின்றனர்.   இவர்களுக்குச் சிறுநீரக அறுவை சிகிச்சை எவ்வளவு சீக்கிரம் முடியும் அவ்வளவு சீக்கிரம் நடத்த வேண்டும்.

 

அரசு மருத்துவமனைகளில் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகையில் தனியார் மருத்துவமனைகளில் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து நடைபெறுகிறது.   கடந்த ஏப்ரல் 2020 முதல் தனியார் மருத்துவ மனைகளில் 80 உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன    இந்த அறுவை சிகிச்சைகள் மூலம் 26 சிறுநீரகங்கள், 17 ஈரல்கள், 18 இதயங்கள், ஒரு இதயம் மற்றும் நுரையீரல், 18 இரு நுரையீரல்கள் மாற்றப்பட்டுள்ளன.