சென்னை: உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உறுப்பு தானம் என்பது ஒரு நபர் உறுப்பு அல்லது திசுக்களை, தாமாக முன்வந்து, மரணத்தில் விளிம்பில் உள்ளோருக்கு தானமாக அளிப்பதாகும். பொதுவாக, உடலுறுப்பு தானம்,. உயிருடன் இருக்கும் போது உறுப்புகளை அளிப்பது, இறந்த பின்னர் உடலுறுப்புகளை தானமாக தருவது என இரண்டு வகைப்படுகிறது. மக்களிடையே உடல்உறுப்பு தானத்தை பிரபலப்படுத்தும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்  நோக்கில்,  ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள்  உலக உறுப்பு தான தினம் அனுசரிக்கப்படுகிறது.

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது. உடல் உறுப்பு தானம் திட்டத்தை 2007-08-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் கருணாநிதி தொடக்கி வைத்தாா். இதை அடுத்து வந்த அதிமுக ஆட்சி மேலும் பிரபலப்படுத்தியது. மாநிலம் முழுவதும் 13 இடங்களில் மட்டுமே, மூளைச் சாவடைந்தவா்களின் உடல் உறுப்புகளை எடுக்கும் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.  பின்னர், திமுக ஆட்சியமைந்த பிறகு, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உடல் உறுப்புகளை எடுக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதன் காரணமாக, உடல்உறுப்பு தானத்தில் தமிழ்நாடுதான்,   உலகிலேயே  முதலிடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில்,  இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள (டிவிட்டர்) பக்கத்தில்,  உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்!

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.