சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி முதல் விருப்ப மனு வாங்கலாம் என தவெகவினருக்கு அக்கட்சி தலைமை அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றும் கல்லா கட்டி வருகின்றன.


இந்த நிலையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் முதல் முறையாக குதித்துள்ள நடிகர் விஜயின்  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் விருப்ப மனு வினியோகிக்கப்படும் எனஅறிவித்துள்ளது.

அதன்படி வருகிற 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை விருப்ப மனு வினியோகம் செய்யப்பட உள்ளது. கட்சியினர் விருப்ப மனுக்களை தலைமை நிலைய செயலகத்தில் மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம்‘ என அறிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்களுக்கு விருப்ப மனு விநியோகம் கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது.

இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும். அந்த வகையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம்.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், வரும் 06.02.2026 வெள்ளிக்கிழமை முதல் 14.02.2026 சனிக்கிழமை வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன.

பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம்.

விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும். இதைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]