சென்னை :
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட அதிமுகவின் முப்பெரும் விழாவுக்கு ஓபிஎஸ் அணியினருக்கு அழைப்பு விடுக்கவலில்லை என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரோயன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓபிஎஸ் தலைமையிலும், சசிகலா தலைமையில் எடப்பாடி உளிட்டவர்களும் செயல்பட்டு வந்தனர். பிறகு சசிகலா மற்றும் தினகரனை எடப்பாடி ஒதுக்கிவிட்டு தனி அணியாக செயல்பட ஆரம்பித்தார். அதன் பிறகு, எடப்பாடி, ஒ.பி.எஸ். அணிகள் இணைந்தன.
இதற்கிடையே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற பிரச்சினை எழுந்தது. இது குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு, ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ் அணியினருக்கே இரட்டை இலை மற்றும் கட்சியின் பெயர் என அறிவித்தது தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். அணியினருக்கிடையே பிளவு ஏற்பட துவங்கியிருக்கிறது.
ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரேயன், சில தினங்களுக்கு முன்பு, “அணிகள் இணைந்து 3 மாதங்கள் ஆன போதிலும் மனங்கள் இணைய வில்லை” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இது மைத்ரேயனின் சொந்த கருத்து என்று தம்பிதுரை தெரிவித்தார். இதை மைத்ரேயன் மறுத்தார். மேலும், “இது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் பிரதிபலிப்பு என்றும் முதல்வர் அணியினர் தங்களை ஓபிஎஸ் அணியினராகவே பார்க்கின்றனர்” என்றும் மைத்ரேயன் தெரிவித்தார்.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாட மதுரையில் தோப்பூரில் முப்பெரும் விழா நடைபெற்றது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, இரட்டை இலை சின்னத்தை மீட்டதற்கான விழா, அதிமுக கொடியேற்று விழா என்று பிரம்மாண்டமாக மதுரையில் இன்று நடந்தது.
இந்த விழாவுக்கு ஓபிஎஸ் மற்றும் அவரது அணியைச் சேர்ந்த கே.பி. முனுசாமி மற்றும் அவை தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட யாருக்கும் அழைப்பு இல்லாததால் அந்த அணியினர் அதிருப்தியில் இருக்கிறார்கள். . இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ஓபிஎஸ்ஸுக்கு ஏதும் தெரியாது அவரது அணியினர் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து மைத்ரேயன் மதுரையில் முதல்வர் எடப்பாடி விழாவில் ஓபிஎஸ் அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா இல்லையா என எனக்கு தெரியாது. ஒரு மாவட்ட செயலாளர், அமைச்சராக இருப்பவர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நிகழ்ச்சியின் முக்கியத்துவம் என்ன அதற்கேற்றாற்போல் யார் யாருகெல்லாம் தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டிருக்க வேண்டும். இப்படி முக்கியமானவர்கள் யாரையும் அழைக்காமல் மாவட்டச் செயலாளரோ அமைச்சரோ தங்களது சுய விளம்பரத்துக்காக செய்தது கண்டிக்கத்தக்கது. சின்னம் கிடைத்ததே 2 நாள்களுக்கு முன்புதான். ஆனால் இவர்கள் வைத்துள்ள பிரம்மாண்ட கல்வெட்டை பார்த்தால் எதேச்சையாக நடந்தது போல் தெரியவில்லை. முன்கூட்டியே திட்டமிடப்பட்டே நடந்திருக்கிறது. இரட்டை இலை சின்னத்திற்காக டில்லியில் நடையாய் நடந்து பாடுப்பட்டவர்கள் அனைவரையும் அழைத்திருக்கலாம். இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். நான் பேஸ்புக்கில் பதிவு செய்த பதிவு கசப்பான உண்மைதான்” என்று மைத்ரேயன் தெரிவித்தார்.
மேலும், “ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழிகாட்டு குழுவை ஏற்படுத்த வேண்டும். ஓபிஎஸ் அணியினர் இரண்டாம் தர குடிமக்கள் போல் நடத்தப்படுகிறார்கள். ஆகவே ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும்” என்று கூறினார்.