சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அதிமுக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் இன்று இபிஎஸ் அணிக்கு தாவினார். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல மாவட்டச் செயலாளர்கள் ஓபிஎஸ் அணியில் இருந்து இபிஎஸ் அணிக்கு தாவி வருகின்றனர்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு வரும் 23ந்தேதி கூட உள்ள நிலையில், கடந்த 4ஆண்டுகளாக நீடித்து இரட்டை தலைமைக்கு எதிராக ஒற்றை தலைமை கோஷம் எழுந்துள்ளது. இந்த கோஷத்தின் பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதும், அவரே கட்சியை கைப்பற்றும் நோக்கில் காய்நகர்த்தி வருவதும் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்தது. இதைத்தொடர்ந்து எடப்பாடி, ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. யாருக்கு கட்சியினரிடையே ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தங்களது ஆதரவாளர்களைத் திரட்டி வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரது வீட்டிலும் ஆதரவாளர்கள் கூடி அவரவர் பலத்தை நிரூபித்து வருகின்றனர்.
தற்போதைய நிலையில், அதிமுகவில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களின் 60 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், ஓபிஎஸ்-க்கு 12 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இன்று திடீரென, ஒபிஎஸ் ஆதரவாளரான, நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவும், விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரனும் எடப்பாடி பக்கம் தாவி இருக்கிறார்கள். இரண்டும் மா.செக்கள் திடீரென்று அனிதாவியதால் ஓ .பன்னீர்செல்வத்திற்கு இருந்த 12 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தற்போது 10 ஆக குறைந்திருக்கிறது.
இந்த பரபரப்பான சூழலில், ஓபிஎஸ் தர்மயுத்தத்தின்போது அவருக்கு ஆதரவாக இருந்து வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் மா.பா.பாண்டியராஜனும், எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் இணைந்துள்ளார். இது ஒபிஎஸ்க்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.