சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா  தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றுமுதல் முகக்கவசம் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில தினங்களாக அதிகரித்துவருகிறது. நேற்று ஒரேநாளில் 17,122பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,61,560 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்து உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், முகக்கவசம் கட்டாயமாகப்படுவதாகவும், கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும், பெரிய வணிக நிறுவனங்களில் குளிர்சாதன இயந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்களும், இறப்பு நிகழ்ச்சிகளில் 50 நபர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இதுவரை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், 2ம் தவணை எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே எடுத்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளார். அத்துடன்,   அனைவரும் ஒருங்கிணைந்து தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.