சென்னை: நாளை கூட இருக்கிற அதிமுக பொதுக்குழுவில், இயற்றப்பட உள்ள தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவர் நாளை நடைபெற உள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக இன்று மாலை அறிவிப்பேன் என்று தெரிவித்து உள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமாகி கட்சி உடையும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான சூழலில் நாளை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது. இதையொட்டி, அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் நிறைவேற்ற 23 தீர்மானங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இந்த தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓபிஎஸ்ஸிடம் அதிமுக வரவு, செலவு கணக்கு விவரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் வாசிப்பதற்காக அதிமுக வரவு, செலவு கணக்கு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை ஜெ.சமாதிக்கு செல்லும் ஓபிஎஸ், அங்கு மீண்டும் தர்மயுத்தம் என்ற பெயரில் மவுனயுத்தம் செய்யப்போகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும், நாளை தொடங்க உள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பாரா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதுதொடர்பான கேள்விக்கு பதில் கூறிய ஓபிஎஸ், பொதுக்குழுவில் கலந்துகொள்வது குறித்து இன்று மாலை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.