சென்னை:
ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யும், எழுத்தாளருமான திலகவதி ஐபிஎஸ், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்த்தை சந்தித்து பேசினார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெ.மறைவுக்கு பிறகு, அதிமுகவை சசி கைப்பற்றியுள்ளார். அதை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து களத்தில் நிற்கிறார். அவருக்கு ஆதரவாக கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் அதிருப்தியில் இருந்த கட்சி நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அவருக்கு ஆதரவாக மயிலாப்பூர்எம்எல்ஏ நடராஜ், ஆறுகுட்டி, மாணிக்கம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களும் மைத்ரேயன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஓய்வு பெற்ற டி.ஜி.பி. திலகவதி, ஓ.பன்னீர்செல்வத்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்ததாகவும் தெரிகிறது. சந்திப்புக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ், திலகவதி சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமை உடையவர் திலகவதி. காவல்துறை அதிகாரியாக மட்டுமல்லாமல் நல்ல எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும் இருந்து வருகிறார்.