சென்னை: வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் கடுமையான பயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு  அதிமுக சார்பில், நாளை முன்னாள் முதல்வரும், துணை முதல்வரும் ஆய்வு செய்யப்போகிறார்கள்.  பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் “கோரிக்கைகளை கேட்க வருகிறோம்” என்று அவர்களது சுற்றுப்பயண விவரங்களை வெளியிட்டு உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக கனத்த மழை பெய்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இந்த மழையின் பாதிப்பு காரணமாக வயல்வெளிகள் தண்ணீரில் மிதந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி பாழயின்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் நிவாரண உதவிகளும் வழங்கினார்.

அதேபோல அதிமுக சார்பில் சென்னையில்,  வெள்ளப்பாதிப்புகள் குறித்து  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் பருவமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து  “கோரிக்கைகளை கேட்க வருகிறோம்”  என  எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் கூட்டாக அறிவித்து உள்ளனர்.

அதன்படி,  டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

நாளை(16.11.2021) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் அந்தந்த மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுடன் பார்வையிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்கள் வழங்க உள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்ட விவசாய பெருமக்களை நாளை 16.11.2021 அன்று நேரில் சந்தித்து, மாண்புமிகு ஒருங்கிணைப்பாளர்கள் நிவாரண உதவிகளை வழங்கி, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிகிறார்கள் என்று அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

காலை 9மணி  கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி – புவனகிரி டவுன் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் .

காலை 11மணி மயிலாடுதுறை மாவட்டம் 

சிதம்பரம் தொகுதி – பூவாளை – பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்.

சீர்காழி தொகுதி – எருக்கூர்

பூம்புகார் தொகுதி – தரங்கம்பாடி

மதியம் 1மணி நாகப்பட்டினம் மாவட்டம் 

கீழ்வேலூர் தொகுதி – திருக்குவளை கருங்கண்ணியில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்

மாலை 3.30 மணி திருவாரூர் மாவட்டம் 

திருத்துறைபூண்டி தொகுதி,  ராயநல்லூர் கோட்டகம், புழுதிகுடி சிதம்பரம் கோட்டகம் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்.

தஞ்சாவூர் மாவட்டம்:

பட்டுக்கோட்டை தொகுதி,   சொக்கநாவூர் புலியகுடி

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.