சென்னை: தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லி வீதிகளில் ஒ.பி.எஸ் – இ பி எஸ் டெல்லி தெருக்களில் அலைந்து கொண்டு இருக்கின்றனர் என அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பெங்களூரு புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். விரைவில் வேறு கட்சியில் இணைய இருப்பதாகவும் சூசகமாக தெரிவித்தார்.

ஜெ.மறைவுக்கு பிறகு சசிகலாவின் ஆதரவாளராக இருந்து வந்த கர்நாடக மாநில செயலாளர்  புகழேந்தி, டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்து பணியாற்றிவந்தார். ஆனால், அங்கு அவருக்கும் டிடிவிக்கும் ஒத்துப்போகாததால், அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு செய்தி தொடர்பாளர் பதவி வழங்கி ஓபிஎஸ், இபிஎஸ் கவுரவித்தனர்.

இவர், சசிகலா விடுதலையாகி தமிழகம் வந்த நேரத்தில்,  அம்மா பயன்படுத்திய காரை, சசிகலா பயன்படுத்துகிறார். அவர் நலமோடு வரவேண்டும் என்பது தான் முதல்வர், துணை முதல்வர், நான் உட்பட எல்லோரின் எண்ணம். இப்போது வரை அவர் எதுவும் பேசவில்லை. சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன் என்று  பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து அதிமுக தலைமைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்ததால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி ஓபிஎஸ்., இ.பி.எஸ். நடவடிக்கை எடுத்தனர்.

இதனால் அதிமுக தலைமைமீது கடுமையான கோபத்தில் உள்ள புகழேந்தி,  சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை மரியாதை நிமித்தமாக  சந்தித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, தொலைக்காட்சி விவாத நிகழ்சிகளில் பங்கேற்ற அப்பாவு தற்போது சபாநாயகராக பொறுபேற்றுள்ளார் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன் என்று கூறினார்.

இந்த நிலையில், தற்போது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஒ.பி.எஸ் – இ பி எஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள புகழேந்தி,  அதிமுவை விற்பதற்கு டெல்லியின் வீதிகளில் ஓபிஎஸ், இபிஎஸ் அலைந்துகொண்டிருக்கின்றனர். .மக்கள் பிரச்சனைக்காக சென்றிருந்தால் கூட்டணி கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து சென்றிருக்க வேண்டும். ஆனால், தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லி தெருக்களில் திரிகிறார்கள் என்பது தான் உண்மை.

அதிமுக மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறியவர், அதிமுக மீட்டெடுக்க முடியாமல் எடப்பாடி எனும் சர்வாதிகாரியின் பிடியில் உள்ளது.  இன்றைய தினம் திமுக இல்லை என்றால் திராவிட இயக்கத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலை உள்ளது என்றும் பெரியார் பெயர் வைத்து வளர்ந்தவன் என்றும் திராவிட இயக்க சிந்தனையில் என்னுடைய செயல்பாடு இருக்கும் விரைவில் என்னுடைய முடிவை அறிவிப்பேன் என்றார்.

மேலும் செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த புகழேந்தி,  சசிகலா அழைத்தால் நான் பேசுவதற்கும் பார்பதற்க்கும் தயாராக இருக்கிறேன். சசிகலா அவர்களால் தான் இந்த கட்சியை காப்பாற்ற முடியும். ஒ.பி.எஸ் – இபிஎஸ் ஆல் கட்சியை காப்பாற்ற முடியாது.

இவ்வாறு கூறினார்.