ராமநாதபுரம்

ன்னீர் செல்வம் என்ற பெயரில் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் போட்டியிடுவது குறித்து ஓ பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக ஆதரவுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் மேலும் 5 பேர் வேட்புமனுதாக்கல் செய்து அவர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டது.

இதனால் ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் மொத்தம் 6 பேர் மனுத்தாக்கல் செய்ததால் குலுக்கல் முறையில் வேட்பாளர்களுக்குச் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம்,

”நான் பல தேர்தல்களை கண்டிருக்கிறேன். ஆனால், ஒரு நிராயுதபாணியாக ஒரு சுயேச்சை வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கின்ற எனக்கு இவ்வளவு ஆதரவு உள்ளது. மொத்தம் 6 பன்னீர் செல்வங்கள் வந்துவிட்டனர். வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இந்தச் சதிவேலையைச் செய்தது யார்? எப்படியோ சதித்திட்டம் வந்துவிட்டது. 

பன்னீர் செல்வம் என்ற பெயரைத் தேடித்தேடி கண்டுபிடித்துள்ளனர். ஆனால், ஓட்டக்கார பன்னீர் செல்வம் என்பது நான்தான். இன்னொரு ஓட்டக்காரதேவர் மகன் பன்னீர் செல்வத்தை அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. பலாப்பழம் சின்னம் எனக்கு கிடைத்தது இறைவன் செயல். 

இருப்பதிலேயே பெரியபழம் பலாப்பழம்தான். நாட்டின் நிலையான பிரதமராக மோடி வரவேண்டுமென நாட்டில் அலை வீசிக் கொண்டிருக்கிறது. 400க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. தனித்துப்பெரும் கட்சியாக வெற்றிபெறும். அந்த சமுத்திரத்தில் என்னுடைய வெற்றியையும் கொண்டு சென்று சேர்க்கும் பொறுப்பு ராமநாதபுரம் மக்களுக்கு உள்ளது.” 

என்று கூறினார்.