புதுக்கோட்டை,

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-சும், இந்நாள் பிரதமர் எடப்பாடி பழனிச்சாமியும் மோடியிடம் மண்டியிட்டு கிடக்கிறார்கள் என்று ப.சிதம்பரம் கடுமையாக தாக்கி பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி  பஸ் நிலையம் எதிரே உள்ள காமராஜர் திடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தமிழக முதல்வர், அமைச்சரவையை 420 என்று கூறுகிறார். அதற்கு தமிழக முதல்வர் தினகரன் தான் 420 என்று கூறுகிறார்.

இதிலிருந்தே ஆட்சியின் அலங்கோலம் நமக்கு நன்றாக தெரிகிறது. இது தமிழ்நாட்டுக்கு அவமானம் இல்லையா?.

புராண வரலாற்றில் பாண்டவர்களும் கவுரவர்களும் கிருஷ்ணரிடம் மண்டியிட்டு கிடப்பது போன்று ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோர் பிரதமர் மோடியிடம் மண்டியிட்டு கிடக்கின்றனர்.

புகழ்பெற்ற திராவிட கலாச்சாரத்தில் உள்ள அ.தி.மு.க. பதவிக்காக இது போன்று மண்டியிட்டு கிடப்பது அவமானம் இல்லையா.

ஓ.பி.எஸ். மற்றும் இ.பி. எஸ். ஆகியோர் கூட்டு களவாணிகள்.  இந்த அரசு ஒரு நொடி கூட இனி நீடிக்க கூடாது. தமிழக அரசு கலைய வேண்டும், அல்லது கலைக்கப்படவேண்டும் என்று கூறினார்.

மேலும்,  பிரதமர் மோடி சி.பி.ஐ. அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை ஆகியவற்றின் தலைவராக தான் மக்கள் அவரை பார்க்கின்றனர்.

தந்தை பெரியாரின் கொள்கைகள் நிறைந்த நாடான தமிழகத்தில் பா.ஜ.க.வால் எப்போதும் வேரூன்ற முடியாது என்பது பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அ.தி.மு.க.வை பயன்படுத்தி அதன்மேல் ஏறி பா.ஜ.க. சவாரி செய்ய நினைக்கிறது.

வெளிநாட்டில் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தை ஒழித்த பா.ஜ.க. ஏழை மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக சொன்னது. தேர்தல் நேரத்தில் கூறிய எந்த வாக்குறுதி களையும் பா.ஜ.க. நிறைவேற்றவில்லை.

ஆண்டுக்கு 2 கோடி மக்களுக்கு வேலை வழங்குவதாக சொன்ன மோடியின் பண மதிப்பின்மை யால் சுமார் 15 லட்சம் பேர் வேலையிழந்து தவிக்கிறார்கள்.

இன்னும் 650 நாட்களில் மத்தியில் புதிய ஆட்சி அமையும் வாய்ப்புள்ளது.  அப்படி அமையும் புதிய அரசு, விவசாயிகள், பொதுமக்கள் நலன் காக்கும் அரசாக அமையும்.

இந்தியாவில் விவசாயிகளின் வயிற்றில் மத்தியில் ஆளும் பாஜக அரசு அடிக்கிறது. விவசாயிகள் பிரச்சனைகளை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.  கரும்பு, நெல் ஆகியவற்றிற்கு உரிய விலை கொடுக்கவில்லை.   தலித் மக்கள் சிறுபான்மையின மக்கள் இந்தியாவில் அச்சுறுத்தலுடனேயே வாழ்கின்றனர் என்று கூறினார்.

2015-ம் ஆண்டிற்கு முன்பு தமிழகத்தில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை என்பது கிடையாது. ஆனால் தற்போது விவசாயிகள் தற்கொலை என்பது அதிகரித்துவிட்டது.

மத்திய அரசால் சிறுபான்மையினர்களுக்க பாதுகாப்பில்லை. பெண்கள் சிறுபான்மையினர் தலித் மக்கள் ஆகியோர் அச்சத்தில் உள்ளனர். எந்த அரசையும் அல்லது எந்த அதிகாரியையும் பார்த்து நான் அஞ்சமாட்டேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் ஆவேசமாக கூறினார்.