சென்னை,

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்,  தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜாவின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நேற்று முன்தினம்  நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிவகங்கையை சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா வீர மரணம் அடைந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு வீரர் கவாய் சுமேத் வாமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலை நேரத்திலும் இருதரப்புக்கும் இடையே சண்டை தொடர்ந்தது. இதன் முடிவில் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, ராணுவம் தரப்பில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் கந்தணியை சேர்ந்த இளையராஜா, மகாராஷ்டிராவை சேர்ந்த கவாய் சுமேத் வாமன் உள்பட 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக அவர்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி தமிழக வீரர் இளையராஜா மற்றும் சுமேத் வாமன் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜாவின் உடல் இன்று இரவு அல்லது நாளை தமிழகம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது தமிழக அரசு அறிவித்துள்ள 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.