ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் பல அறிவிப்புகளை 110 விதியின் கீழ் வெளியிடுவார்.
இந்த விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடும்போது, பிற எம்.எல்.ஏ.க்கள் இது குறித்து கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படாது. ஆகவே இந்த 110 விதியை மிக முக்கியமான தருணங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் இதை ஜெயலலிதா பொருட்படுத்தவில்லை. மிகச் சாதாரண விசயங்களுக்குக் கூட 110 விதியை அவர் பயன்படுத்தினார். இது ஜனநாயக விரோதம் என்ற விமர்சனம் எழுந்ததையும் அவர் புறக்கணித்தார்.
இந்த நிலையில் இன்று ஜல்லிக்கட்டு வன்முறை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
“விவாதங்களை புறக்கணிப்பது ஓ.பி.எஸ். காலத்திலும் தொடருமோ” என்ற அச்சத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரம், “ஜெயலலிதாவின் கருத்துக்களுக்கு மாறாக ஜி.எஸ்.டி. மசோதா, உதய் மின்திட்டம் போன்றவற்றில் செயல்பட்டிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். சமீபத்தில் ஆர்.எஸ். எஸ். பேரணிக்கு அனுமதி கொடுத்ததும் இந்த பட்டியலில் இடம் பிடிக்கிறது.
இப்படி ஜெயலலிதா கொண்டிருந்த கருத்துக்களுக்கு மாறாக செயல்படுகிறார் ஓ.பி.எஸ். என்று விமர்சனம் எழுந்த சூழ்நிலையில், இந்த 110 விதியிலாவது அப்படியே தலைவியை தொடரட்டும்” என்ற கிண்டலான விமர்சனமும் எழுந்துள்ளது.