டில்லி

திர்க்கட்சிகள் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மத்திய அரசு நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் திட்டமிட்டு உள்ளது. ஒரு குழு இந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்காக அரசியல் சாசனத்தைத் திருத்த வேண்டும். மேலும் இதற்காக நாடாளுமன்ற இரு அவைகளிலும் மட்டும் மசோதா நிறைவேற்றினால் போதாது. அது மாநில சட்டமன்றங்களாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.  பாஜக ஆளும் மாநிலங்கள் இதை ஆதரிக்கலாம், திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்காளம் ஆதரிக்குமா? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா கூ ட்டணியால் அச்சத்தில் இருக்கும் பாஜக,இதிலிருந்து மக்களை திசை திருப்பவே இந்த திட்டத்தைக் கையில் எடுத்திருப்பதாகச் சாடியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, ‘இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி எப்போதும் கூறி வருகிறார். அப்படியிருக்கப் பிற அரசியல் கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் இது தொடர்பாக எப்படி முடிவு எடுக்க முடியும்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆம் ஆத்மியை சேர்ந்த பிரியங்கா காக்கர்,  சிவசேனா (உத்தவ்) கட்சித்தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் ஆகியோர் உள்ளிட்ட பலரும் இந்த திட்டத்தை எதிர்த்து அறிக்கை விடுத்துள்ளனர்.

இந்த திட்டத்தை ஆதரிக்கும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடிக்கு உத்தரப்பிரதேச மக்கள் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்தார்.