டில்லி

நாடாளுமன்றத்தில் 92 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகையில் கடந்த 13-ந் தேதி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு கும்பல் வண்ண புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் இதைத் தீவிரமாக கையில் எடுத்துள்ளன. உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற இரு அவைகளிலும் அறிக்கை அளிக்க வலியுறுத்தியதுடன் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்காக அவர் பதவி விலகவும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இவற்றைவலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போரா டிவருவதால்  இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கிவருகின்றன.  அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் எம்.பி.க்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆயினும் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்து வரும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்ற அலுவல்களை முடக்கி வருகின்றன.. நேற்று மக்களவை காலையில் கூடியது முதல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் ஓம் பிர்லா, அவையை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடியபோதும் நிலைமை மேம்படவில்லை. எனவே பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 2.45 மணி, தொடர்ந்து 3 மணி என அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது..

நேற்று மாலை 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். காங்கிரஸ் அவைத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் இதில் அடங்குவர்.

மாநிலங்களவையும் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது. அவை மீண்டும் கூடியபோது, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 45 பேரை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை அவை முன்னவரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்து தீர்மானம் நிறைவேறியது.

ஏற்கனவே 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் இருந்து 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தின் கொலை என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.