டில்லி
மக்களவையில் அநாகரீகமாகப் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் சபாநாயகரை வலியுறுத்தி உள்ளன.
மக்களவையில் சந்திரயான்-3 வெற்றி குறித்த விவாதத்தின்போது, பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர். டேனிஷ் அலிக்கு எதிராக பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர். ரமேஷ் பிதூரி அநாகரீகமாக சில வார்த்தைகள் பேசியது தொடர்பாக கட்சித் தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிதூரி பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத்சிங், அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுமாறு சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்தார்.
அந்த வார்த்தைகளை ஏற்கனவே அக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டதாக அவையை நடத்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். கே.சுரேஷ் தெரிவித்தார். அவைத்தலைவர் ஓம் பிர்லா ரமேஷ் பிதூரியை எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் மக்களவை உரிமைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் நசீம் கான், மக்களவையில் இருந்து பிதூரி நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ, மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாரத ராஷ்டிர சமிதி தெலுங்கானா மேல் சபை உறுப்பினர் கே.கவிதா, சிவசேனா (உத்தவ் பால் தாக்கரே) மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர். பிரியங்கா சதுர்வேதி, முஸ்லிம் அமைப்பான ஜமாத் உலமா-இ-ஹிந்த் நிர்வாகிகள் உள்ளிட்டோரும் ரமேஷ் பிதூரி மீது சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அதே வேளையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர். நிஷிகாந்த் துபே, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், ”பகுஜன் சமாஜ் நாடாளுமன்ற உறுப்பினர். டேனிஷ் அலி, பிரதமர் மோடிக்கு எதிராக மிகவும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை கூறியுள்ளார். அதனால்தான் ரமேஷ் பிதூரி நிதானமிழந்து அவ்வாறு பேசிவிட்டார். எனவே டேனிஷ் அலி பேசியது குறித்தும் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.