நாக்பூர்: இந்து சமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இணைந்த ஒன்றல்ல; எனவே, பாரதீய ஜனதாவை எதிர்ப்பதென்பது இந்துக்களை எதிர்ப்பதாகாது என்றுள்ளார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷ் பைய்யாஜி.

குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பேசியுள்ள அவர் இந்தக் கருத்தை கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாரதீய ஜனதா அரசின் சர்ச்சைக்குரிய சட்டமான குடியுரிமைச் சட்டத்தை ஆர்எஸ்எஸ் முழுமூச்சாக ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் பைய்யாஜி தெரிவித்துள்ளதாவது, “இந்து சமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இணைந்த ஒன்றல்ல. எனவே, பாரதீய ஜனதாவை எதிர்ப்போர் இந்து சமூகத்தை எதிர்ப்பவர்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

அரசியல் போராட்டம் தொடரும். ஆனால், அதை இந்துக்களோடு இணைத்துப் பார்க்கக்கூடாது. குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அதை, அரசியலமைப்பு விதியின்படி மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவது அவசியம்.

குடியுரிமைப் பிரச்சினை என்பது மத்திய அரசு தொடர்பானதே ஒழிய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்டதல்ல. மாநில அரசுகள் தங்களுக்குரிய அதிகாரங்களின் அடிப்படையிலேயே சட்டங்களை இயற்றிக்கொள்ள முடியும்.

இந்தியாவில் பணியாற்ற விரும்பும் எவரும், இந்துக்களோடு ஒத்திசைந்து, அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பணியாற்ற வேண்டும். நினைவிற்கெட்டாத காலம் முதல், இந்தியாவின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இந்துக்கள் சாட்சியாக இருந்து வருகின்றனர். எனவே, இந்த நாட்டிலிருந்து இந்துக்களைப் பிரிக்க முடியாது.

இந்துக்கள் வகுப்புவாதிகளோ அல்லது வன்முறையாளர்களோ அல்ல என்பதால், யாரும், அவர்களுடன் இணைந்துப் பணியாற்ற தயங்க வேண்டியதில்லை” என்றுள்ளார் அவர்.