சென்னை:

ரசியலில் ரஜினிகாந்தை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் எதிர்ப்பேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் சென்னையில் இருந்து வைகை விரைவு தொடர்வண்டியில் திருச்சி புறப்பட்டார். அவருடன் மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலை குழு உறுப்பினர்கள் ஸ்ரீபிரியா, கமிலா நாசர் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றனர்.

ஓடும் ரெயிலில் செய்தியாளர்களுக்கு  கமல்ஹாசன் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் ள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்

கேள்வி:- திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள். தமிழக அரசியல் எப்படி இருக்கிறது?.

பதில்:- சீர்திருத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மக்களின் கடமையும் கூட. யாரோ ஒரு அரசியல்வாதி வருவான். அவன் திருத்துவான் என்று நினைக்காமல், மக்கள் தங்களது பொறுப்பாக அதை ஏற்று செயல்பட வேண்டும். அதை மக்கள் ஆரம்பித்துவிட்டார்கள்.  அதற்கான அடையாளங்கள் தெரிவதாக நான் நம்புகிறேன்.

கேள்வி:- மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று கருதுகிறீர்கள்?.

பதில்:- முதலில் வாக்களிக்க பணம் வாங்கக்கூடாது. அது தலையாய கடமை. கட்டாயம் வாக்களித்தே ஆக வேண்டும். இது இரண்டாவது  தலையாய கடமை. மற்றபடி, நீங்கள் யாரை தேர்ந்தெடுக்கிறீர்களோ, அவர்களிடம் துணிவாக கேள்விகளை கேட்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு இருக்கும் சுயநலங்களை மக்கள்  பிரதிபலிக்கக்கூடாது.

கேள்வி:- மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு 1½ மாதம் கடந்த நிலையில், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் மட்டும் நியமித்துள்ளர்கள். இன்னும் நிர்வாகிகள் நியமிக்கப்படாதது ஏன்?.

பதில்:- உங்களிடம் சொல்லவில்லையே தவிர, அமைப்பு குழுக்கள் எல்லாம் அமைத்துக்கொண்டிருக்கிறோம்.   அது உள்கட்சி விவகாரம். ஆகவே, அதை அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிப்பேன்.

கேள்வி:- தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ‘நாளை நமதே’ பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்தித்து இருக்கிறீர்கள். மக்களின் எதிர்பார்ப்பு எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?.

பதில்:- நெஞ்சைப் பிழியும் படியாக இருக்கிறது.  ஏதாவது ஒரு மாற்றம் நடக்காதா என்று ஏங்குகிறார்கள். இது எங்களுக்கு இருக்கும் கடமை என்ன என்பதை எங்களுக்கே உணர்த்தியது. கண்ணீர்மல்க  அவர்கள் வைக்கும் நம்பிக்கை. “செஞ்சிருவீங்கல்ல… நம்பளாம்ல..” என்று கேட்கிறார்கள்.

கேள்வி:- காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?.

பதில்:- 144 ஆண்டுக்கு பிறகு மறுபடியும் சொல்வதை கேட்க வேண்டும் என்பது ஒரு சோகமான ஒரு சூழல். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இரண்டு மாநிலங்களுக்கும் உள்ள உரிமைகள் இருக்கின்றன. ஆனால், அதை சொல்வதற்கு பயன் இல்லை என்ற நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். தண்ணீர் கொடுங்கள். இவ்வளவு கொடுங்கள் என்று கேட்ட போராட்டம் இப்போது ஆணையமாவது அமையுங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டது. அதற்கு காரணம் (தமிழக அரசியல்வாதிகள்) அசட்டையாக இருந்துவிட்டது தான்.

கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?.

பதில்:- அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் தட்டிக்கழிக்கிற மாதிரியான கோபமும் எழுகிறது. அமைக்கவே மாட்டார்கள் என்று ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதுதான் விதி என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. விதியை மதியாலோ, நீதியாலோ வென்றே தீர வேண்டும்.

கேள்வி:-   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்:- என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அப்படி எல்லாம் போகவிடக்கூடாது என்பது தான் என்னுடைய தாழ்மையான கருத்து, வேண்டுகோள். மத்திய அரசும், மாநில அரசும் தயவு செய்து மக்களை அப்படி கொதித்து எழவைத்துவிடக்கூடாது. உங்களின் அரசியல் நோக்கம் எதுவாக இருந்தாலும் மக்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்.

கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முதல்வரும்,  துணை முதல்வரும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். எதிர்கட்சிகளோ, மாணவர் அமைப்புகளோ போராட்டம் நடத்த சென்றால் அனுமதி அளிக்க மறுக்கிறார்கள். இதை  எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடும் செயல் இது. இதை ஏற்றுக்கொள்ள இயலாது.

கேள்வி:- எல்லா கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியத்துக்காக போராடுகிறார்கள். நீங்களும், பா.ஜ.க.வும் மட்டும்  ஏன்போராடவில்லை? நீங்கள் எப்போது போராடுவீர்கள்? அதற்கான திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா?

பதில்:- மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடைஞ்சல் இல்லாமல் போராடுவது தான் போராட்டம். ஆனால் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் வாழ்க்கையே நாசமாக போகிவிடுமே என்று இடைஞ்சலை பற்றி கவலைப்படாமல் அராஜகம் விளைவிக்கக்கூடாது. அரசியல் சாசனத்தின்படி நம் கருத்துகளை தெளிவாக சொல்லியும், அழுத்தம் கொடுக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அவைகளை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வெறும் வீண் அரசியல் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது. வாய்ச்சவுடால் அரசியல் போதாது. என்னுடைய போராட்டம் மக்களின் எதார்த்த வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது. இதற்கு காரணம் யாரோ அவர்களை பாதிக்கும் போராட்டமாக இருக்கும். ஒத்துழையாமை இயக்கம் போல கூட இருக்கலாம்.

கேள்வி:- திருச்சி பொதுக்கூட்டத்தில் எதை மையமாக வைத்து பேசப்போகிறீர்கள்?

பதில்:- காவிரி மேலாண்மை வாரியத்தை பற்றியும், அதற்கான தீர்வை நோக்கி நகர்வது குறித்தும் பேச திட்டமிட்டு இருக்கிறேன்.

கேள்வி:- அ.தி.மு.க., தி.மு.க.வை எதிர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நீங்கள் சொல்லி இருந்தீர்கள். அதேபோல், உங்களுடைய நண்பர் ரஜினிகாந்தையும் எதிர்ப்பதற்கான சூழல் வரும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

பதில்:- ஏற்பட்டால் செய்யவேண்டியது தான். கொள்கை ரீதியாகவும், செயல் முறைகளை பார்த்தும் நான் எடுத்த முடிவு. அது வரும்போது பார்க்கலாம். கெட்டது தான் நடக்கும் என்று ஏன் யூகிக்க வேண்டும்? அப்படி ஏற்படாமல் இருந்தால் நல்லது. ஏற்பட்டால் நின்று செயல்படாமல் இருந்துவிட முடியுமா?

கேள்வி:- வட இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்று போராட்டம் நடந்து வருகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- திருத்தம் செய்யவே கூடாது. அதில் மாற்றம் செய்யக்கூடாது.

கேள்வி:- கரை வேட்டி கட்டக்கூடாது என்று உங்கள் கட்சி தொண்டர்களுக்கு நீங்கள் கட்டளையிட்டு இருக்கிறீர்கள். அப்படி என்றால், உங்கள் கட்சியின் ‘டிரஸ் கோடு’ தான் என்ன?.

பதில்:- எந்த ஆடை வேண்டுமானாலும் உடுத்திக்கொள்ளலாம். ஆனால், எந்த ஆடையிலுமே கரையிருக்கக்கூடாது.

–  இவ்வாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.