டெல்லி:

சண்டிகர் விமானநிலையத்துக்கு பெயர் வைப்பது தொடர்பாக ராஜ்யசபாவில் காரசார விவாதம் நடந்தது. இந்த விவகாரம் இன்று ராஜ்யசபாவின் ஜீரோ ஹவர்சில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ரிட்டப்ரத்தா பானர்ஜி பேசுகையில்,‘‘சண்டிகர் விமான நிலையத்துக்கு பெயர் வைப்பதில் சர் ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்துக்கு சையது இ ஆலம் பகத் சிங் பெயர் வைக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு ஹரியானா பாஜ முதல்வர் மறுப்பு தெரிவித்து வருகிறார். அவர் மறைந்த பாஜ தலைவர் மங்கள் செயின் பெயர் வைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்’’ என்றார்.

காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா பேசுகையில்,‘‘ஒரு புறம் சுதந்திர போராட்ட வீரரின் பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படுகிறது. மறுபுறும் மறைந்த பாஜ முன்னாள் முதல்வரின் பெயர் வைக்க பாஜ ஆசைப்படுகிறது’’ என்றார்.

பாஜ அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி எதிர்கட்சிகளுக்கு பதில் கூறுகையில்,‘‘நாங்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை. யாரும் இது போல் தெரிவிக்கவில்லை. பகத்சிங் மிகப்பெரிய தியாகி. அவர் ஒவ்வொருவராலும் மதிக்கப்பட்டு வருகிறார்’’ என்றார்.

தொடர்ந்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தை சம்மந்தப்பட்ட கருத்து தெரிவித்த அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்ல மத்திய அமைச்சர் நக்விக்கு துணை சபாநாயகர் குரியன் அறிவுறுத்தினார். ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத்யாதவ், எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

‘‘விமானநிலையத்துக்கு பக்த் சிங் பெயர் வைப்பது தொடர்பாக மத்திய அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை தெரியபடுத்த வேண்டும்’’ என்று ஆசாத் வலியுறுத்தினார்.

‘‘இந்த கருத்துக்கள் ஏற்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது’’ என்று குரியன் தெரிவித்தார். ‘‘ஒவ்வொரு மார்ச் 23ம் தேதி அன்றும் பகத்சிங் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்’’ என்று காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா கேட்டுக் கொண்டார்.