சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, சென்னை மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளிலுள்ள ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங் பகுதிகளில், ரயில்வே காவல்துறை தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு, தொடர்ந்து பல நாட்களாக கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களைக் கண்டறிந்துள்ளது.

இத்தகைய வாகனங்கள் பயங்கரவாதிகளின் குண்டுவைப்பு சதித்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்பதால் இந்த தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரயில்வே காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் நம்பர் பிளேட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, சென்னை டிவிஷனில் மட்டும் கேட்பாரின்றி பல நாட்களாக பார்க்கிங் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 228 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டன.

சேலம் டிவிஷனுக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் 420 கேட்பாரற்ற வாகனங்கள் கண்டறியப்பட்டன. சென்னையில் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் 30 வாகனங்களும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 34 வாகனங்களும், தாம்பரத்தில் 21 வாகனங்களும், சிந்தாதிரிப் பேட்டையில் 16 வாகனங்களும், பெரம்பூர் & வியாசர்பாடி ஜீவாவில் 19 வாகனங்களும் கண்டறியப்பட்டன என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.