சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருளான கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனைக்கு முடிவுகட்ட டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி திட்டம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, “ஆபரேஷன் கஞ்சா 2.0” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி,  கஞ்சா, குட்கா விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற செயல்களில் பள்ளி, கல்லூரி சிறுவர்களும் ஈடுபடுவது அதிர்ச்சி அளித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் போதை பொருள் என்று விமர்சிக்கப்படுகிறது. ஏற்கனவே டாஸ்மாக் மதுபானத்தால் கோடிக்கணக்கானோர் தள்ளாடிக்கொண்டிருக்கையில், சமீப காலமாக கஞ்சா போன்ற போதை பொருட்களும் இளைஞர்களை சீரழித்து வருகிறது.

இதையடுத்து, தமிழ்நாட்டில்  “கஞ்சா விற்பனையை தடுக்க ” ஆபரேஷன்  கஞ்சா 2.0 எனும் திட்டத்தை தொடர தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அனைத்து மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த டிசம்பர் 2021 ஜனவரி 2022 நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக,  இந்த மாதம் 23.03.2012 முதல் 27.04.2022 வரை ஒரு மாதம் ஆபரேசன் கஞ்சா வேட்டை 20- நடத்தப்பட வேண்டும்.

கீழ்க்காணும் நடவடிக்கைகளை இம்முறையும் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்.

கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது. தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் பதுக்கல் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்தக் கொள்முதல் விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கஞ்சா குட்கா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை இப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு காவல் நிலைய ஆய்வாளர் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி, இரகசியத் தகவல் சேகரிக்க வேண்டும்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.