சென்னை: ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில்,  சிறப்பு அதிகாரியை தமிழகஅரசு நியமித்து உள்ளது.

பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்படவுள்ள ஜெ.நினைவு மண்டபம்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர் சமாதிக்கு பின்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தில்,  பீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவு மண்டபம் கட்ட தமிழகஅரசு முடிவு செய்து, அதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நினைவு மண்டப கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இடையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பணிகள் தொய்வடைந்த நிலையில், தற்போது மீண்டும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.  நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு, தற்போது பொருத்தும்  பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  ஜெயலலிதா நினைவிட பணிகளுக்காக, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜன்  என்பவரை தமிழக அரசு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்துள்ளது.  ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியை விரைந்து முடிக்க 3 மாதங்களுக்கு பாண்டியராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து,  ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24ந்தேதி நினைவு மண்டபத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]