சென்னை: திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசு வேலைக்கு பரிசீலனை  செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பணியில் பணியாற்றும் ஏராளமான அரசு ஊழியர்கள், சம்பள உயர்வுக்கு ஏற்ப திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படித்து பட்டங்களை பெற்று வருகின்றனர். இதனால், அவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கிறது. ஆனால், இதுபோன்ற பட்டங்களால் ஒருவரின் கல்வியறிவு மேம்படுத்தப்படுவது இல்லை என கூறி  தனியார் நிறுவனங்களில்  கண்டுகொள்வது இல்லை. சமீப காலமாக அரசு பணிகளுக்கும் திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வது இல்லை.

இதுதொடர்பாக   சென்னை உயர் நீதிமன்றத்தில்  தனிநபர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு , ‘‘கடந்த 2009-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி 10 + 2 + 3 என்ற அடிப்படையில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, அதன்பிறகு இளநிலைப் பட்டம் என்ற வரிசையில் கல்வி கற்றவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாணையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

ஆனால் மனுதாரர் 10-ம் வகுப்புக்குப்பிறகு நேரடியாக முனைவர் பட்டமே பெற்றுவிட்டார். அதன் பிறகு 12-ம் வகுப்பை படித்து அதிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த தலைகீழ் நடைமுறையை யாரும் அங்கீகரிக்கவில்லை. அரசு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதியின்படி உரிய தகுதியை மனுதாரர் பெறவில்லை என்பதால் அவர் மீது இரக்கம் மட்டுமே காட்ட முடியும். அரசு வேலைவாய்ப்பை வழங்க வேண்டுமென நிவாரணம் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.

அதேநேரம், வழக்கமான நடைமுறைப்படி கல்வியைப் பெற முடியாதவர்களுக்காகவே திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களை உருவாக்கி நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் மத்திய, மாநில அரசுகள் சட்டங்களை உருவாக்கியுள்ளன. ஆனால் இந்த திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசு வேலைவாய்ப்புக்கு ஏற்க மறுப்பதால் பல விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டு வழக்கு தொடரும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே சமூக நலன் கருதி திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை ஏற்க மறுப்பதை மத்திய, மாநில அரசுகள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.