கிடைத்ததை வைத்து வாழும் ஊட்டி ஜேம்ஸ் தாத்தா…

Must read

கிடைத்ததை வைத்து வாழும் ஊட்டி ஜேம்ஸ் தாத்தா…

இந்தக் கொரோனா ஊரடங்கு யாருக்குமே தெரியாமலேயே இருந்த பல நல்ல உள்ளங்களின் வாழ்வில் புதைந்திருக்கும் ரகசியங்கள் பலவற்றை வெளியே வருவதற்கு வெளியே கொண்டுவந்திருக்கிறது.  அந்த வகையில் குன்னூரில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தும் இன்று தனித்து சாலையோரம் எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் ஜேம்ஸ் என்பவரின் கதையும் வெளியே வந்திருக்கிறது.

ஊட்டி டவுனில் சொந்த வீடு சகிதமாக வாழ்ந்து வந்த இவரின் பெற்றோர் இறந்துவிட்ட பின்னர் பெரிதாகச் சொந்த பந்தங்கள் யாரும் இல்லையென்றாலும், ஏதோ ஒரு சூழலில் அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு தனியனாக வாழத் தொடங்கியவர் ஜேம்ஸ்.

“பல வருசமா இந்த குன்னூர் மார்க்கெட்தான் எனக்கு சோறு போட்டுச்சி. இங்க இருக்க கடைல மூட்டை தூக்கி அதுல கெடக்கிற வருமானத்தால் சாப்பிட்டு வந்தேன். திடீர்னு கொரோனானு சொன்னாங்க. எல்லாமே மாறிப் போச்சி. கடையெல்லாம் மூடுனாங்க. வேலை இல்ல. சாப்பாட்டுக்கே வழி இல்ல. ரொம்ப கஷ்ட்டப்படுறேன்”

ஊரடங்கு நேரம்ங்கிறதால கடைகள் ஏதுமில்லாத நிலையில் சாலையோரமாகவே கற்களால் அடுப்பு செஞ்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கையிலிருக்கும் பணத்திற்கேற்ப சமைத்துச் சாப்பிட்டு வருகிறேன்…என்றார்

“இப்போல்லாம் வாரத்துக்கு ஒரே நாள்தான் சமைக்கக் காசு கிடைக்குது. அந்த சாப்பாட்டை வச்சி ஒரு நாளைக்கு ரெண்டு வேளைனு ஒரு வாரத்துக்கு சாப்பிட்ட வெச்சுக்குவேன். இந்த வாரம் கிடைக்கிற காசுல அடுத்தவாரம் சமையலுக்கு வச்சிக்குவேன்” என்று கூறும் இவர் குன்னூர் மலை ரயில் நிலையத்தின் எதிரில் ஒரு பாழடைந்த கட்டட முன்புறத்தில் தான் தங்கி வருகிறார்.

“இங்கதான் தங்கிக்குவேன், மழை வந்தா பக்கத்துல இருக்க வராண்டாக்கு போய்க்குவேன். பசினு யார்கிட்டயும் கேக்க புடிக்காது. குளிருக்கு கம்பளி, மாத்து துணி எல்லாம் இந்தப் பையில் வச்சிருக்கேன்” என்கிறார் கம்பீரமாக.

ஜேம்ஸ் தாத்தா என்று எல்லோராலும் அழைக்கப்படும் இவர் யாருடைய உதவியும் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார். இவருக்கு உறவினர்களோ அல்லது அரசு உதவியோ எதுவும் இல்லை. உணவு, தங்கும் இடம் இல்லாமல் தவிக்கிறார்.  ஆனாலும் எவர் தயவுமின்றி குன்னூரின் கடும் குளிரிலும் நானே எனக்கு ராஜா என்பது போல வாழ்ந்து வருகிறார் ஜேம்ஸ் தாத்தா.

– லெட்சுமி பிரியா

More articles

Latest article