சிய கண்டத்திலேயே ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அபூர்வ பஞ்சநதன நடராஜர் திருக்கோவில் ஊற்றத்தூர் (ஊட்டத்தூர்).

சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர் இத்தலத்து இறைவன் ஊர்.

உள்ளத்துக்கு ஊட்டம் தரும் ஊர்தான். இயற்கையிலேயே நன்னீர் ஊற்று இருந்த ஊர் என்பதனால், ‘ஊற்றத்தூர்’ என்றழைக்கப்பட்டு, அதுவே காலப்போக்கில் ஊட்டத்தூர் ஆகியுள்ளது.

இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த விலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.

ஒருமுறை அவரது வருகையையொட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்துள்ளார் என்றும், இதனால் இந்த தீர்த்தம் மேலும் சிறப்பு பெற்று உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ராஜராஜசோழன் உடல் நலம் இல்லாமல் இருந்தபோது, ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு குணம் அடைந்து ஆயுட்காலம் நீட்டிக்கப்பெற்றார் என்றும் கர்ண பரம்பரை கதைகள் மூலம் அறிய முடிகிறது.

அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால், சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு.

ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது. ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று என்பது இதன் முதல் சிறப்பு. வேறு ஒரு தேவாரப் பாடலில் இந்தத் தலத்தைப் பற்றிய சிறப்பை வைத்துப் பாடியிருப்பதால், இது ‘வைப்புத் தலம்’ ஆகப் போற்றப்படுகிறது.

அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடலூர் என அழைக்கப்பட்டது.

இக்கோவிலில் வானளாவிய பெரிய ராஜகோபுரம் உள்ளது. கோவிலின் நடுவில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இக்கோவிலில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியே ஊரில் உள்ள மற்றொரு கோவிலான பெருமாள் கோவிலுக்கு பிரம்ம தீர்த்தம் எடுத்து சென்றதாக வரலாறு கூறுகிறது. நான்கு புறமும் பெரிய மதில் சுவர் உள்ளது.

இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்று. மாசி மாதம் வளர்பிறையில் பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜெபம் செய்தால் பல தோஷங்கள் நிவர்த்தி ஆகிறது.

இந்த கோவிலில் உள்ள காலபைரவர் சக்திவாய்ந்த தெய்வமாவார். கால பைரவருக்கு 11 வாரங்கள் தொடர்ந்து சகஸ்ரநாம வழிபாடு செய்தால் சிறு குழந்தைகளின் மன பயம் நீங்குவதாகவும், மாடுகளுக்கு வியாதிகள் தீர்வதாகவும் ஐதீகம். அஷ்டமி திதியன்று கால பைரவருக்கு யாகம் நடத்தி, அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்து காலாஷ்ட மந்திரம் ஓதி வழிபாடு செய்தால் மரண பயம் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

ஓர் ஊரில் நதி, தீர்த்தம், வனம், புறம் (ஊர்), மலை ஆகிய ஐந்தும் அமைந்திருந்தால், அது ‘பஞ்ச மங்கலம்’ என்று அழைக்கப்படும். அந்த வகையில், ஊட்டத்தூர் ‘பஞ்ச மங்கலம்’ என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. நதி – நந்தியாறு. தீர்த்தம் – பிரம்ம தீர்த்தம். வனம் – வில்வாரண்யம் (முற்காலத்தில் இந்த இடம் முழுவதும் வில்வ வனமாக இருந்ததாகக் குறிப்பு இருக்கிறது). புறம் – ஊற்றத்தூர். மலை – சோழீஸ்வரர் கோவில் இருக்கும் மலை ஆகிய ஐந்து மங்கலங்களும் திகழும் ஊர் இது.

இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைபபதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார். ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவிலான இந்த கோவில் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடலூரில் இருந்து அடிக்கடி பஸ் போக்குவரத்து வசதி உள்ளது.