சென்னை: கிராமபுற மக்களின் குறைகளை போக்க ‘ஊராட்சி மணி’ என்ற பெயரில் சேவை மையம் திறக்கப்பட உள்ளது. இந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார்
கடந்த 2022-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் புகார்களைத் தீர்க்கும் வகையில் உதவி மையம் அமைப்பது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, கிராமப்புறங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஊராட்சி இயக்ககத்தில் ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி மணி என்ற பெயர், மனுநீதிச் சோழனின் கதையை முன்னோடியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறைகளை உடனடியாகத் தீர்ப்பதை இது உறுதி செய்கிறது. மக்களுக்கு பாரபட்சமற்ற, சமமான சேவையை வழங்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு மையத்தை நாளை (செப்.26) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் புகார்களைத் தெரிவிக்கும் வகையில் மைய அழைப்பு எண்’ 155340’ வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஊராட்சி மணி அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில் கட்டணமில்லா சேவை தொடங்கப்படுகிறது.
அழைப்பு மைய நிர்வாகி மூலமாகவோ, இணையதளம் வாயிலாகவோ குறைகளை உடனடியாக தீர்க்கும்வகையில், உரிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
இதுதவிர, சமூக வலைதளங்கள் மூலமும் குறைகள் பெறப்பட உள்ளன. புகார்களின் தீவிரத்தன்மை அடிப்படையில் அவை வகைப்படுத்தப்பட்டு, உரிய தீர்வு காணப்படும். அதேபோல, சமூக ஊடகங்கள் மூலம் பெறப்படும் புகார்களும் குறைதீர் மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, அவற்றுக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
புகார்களை நேரடி அழைப்பு மையம், வலைதளம், செயலி வாயிலாகவும் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.