மைசூரு:  காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6,605 கனஅடி தண்ணீரிர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி தண்ணீரை திறந்துவிட மறுத்து முரண்டு பிடித்து வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசுக்கு எதிராக அம்மாநில விவசாயிகளை கொண்டு போராட்டத்தை தூண்டி விட்டுள்ளது. இந்த நிலையில், காவரி நீர் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக, காவிரியில், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தண்ணீரை திறந்துவிட கர்நாடக மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறந்து விட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்சத நிலையில், காவிரி  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக   வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மழை காரணமாக, நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 23-ந் தேதி வினாடிக்கு 5 ஆயிரத்து 473 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில்  24-ந் தேதி வினாடிக்கு 6 ஆயிரத்து 338 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை வினாடிக்கு 6 ஆயிரத்து 605 கனஅடியாக அதிகரித்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 4105 கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கர்நாடகம் மற்றும்  தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும், கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீரும் வரத்தொடங்கியதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 181 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்தால், டெல்லி பாசனத்துக்கு   தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினை இருக்காது என்றும் குறுவை சாகுபடி காப்பாற்றப்பட்டு விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.