புதுடெல்லி: முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட தேசிய ஊட்டச்சத்து சர்வேயில், இந்தியளவில் மொத்தம் 6.4% குழந்தைகள் மட்டுமே(2 வயதுக்கு குறைவானவர்கள்), ஓரளவேனும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் ஊட்டச்சத்தைப் பெறுகிறார்கள் என்ற அதிர்ச்சிகர உண்மை வெளிவந்துள்ளது.

அந்த சர்வேயில் கூறப்படுவதாவது; இந்த விகிதம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. ஆந்திர மாநிலம் 1.3% அளவிலும், சிக்கிம் மாநிலம் 35.9% என்ற அளவிலும் கணக்கிடப்பட்டுள்ளது.

மராட்டியம் 2.2% என்ற அளவிலும், குஜராத், கர்நாடகம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் 3.6% என்ற அளவிலும், தமிழ்நாடு 4.2% என்ற அளவிலும் மதிப்பிடப்பட்டுள்ளன. கேரளத்தின் அளவு 32.6%. அதாவது நாட்டிலேயே இரண்டாமிடம்.

ஆனால், பின்தங்கிய மாநிலங்கள் என்று மதிப்பிடப்படுகின்ற ஒடிசா, சத்தீஷ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அஸ்ஸாம் ஆகியவை தேசிய சராசரியைவிட அதிக சதவிகித அளவைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பல்வேறு அளவீடுகளின்படி, வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்று மதிப்பிடப்படுகின்ற தமிழ்நாடு மற்றும் மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் தேசிய சராசரியைவிட கீழே இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.