சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நடைபெற்ற முதலாண்டு பொறியியல் செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. 62 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் நடத்தப்படும் பாடத்திட்டங்கள், செமஸ்டர் தேர்வுகள் என அனைத்தையும் அண்ணா பல்கலைக்கழகமே மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டில் கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. இதனால்,  நவம்பரில் நடைபெற வேண்டிய பருவத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு, இந்த ஆண்டு (2022)  மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நேரடி முறையில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாயின.

இந்த தேர்வை  1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதில்,  முதலாமாண்டு பொறியியல் மாணவர்களில் 38 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 62 சதவீதம் பேர் தோல்வியை சந்தித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, கணித பாடத்தில்தான் பெரும்பாலான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

பருவத்தேர்வின்போது, தேர்வானது  இணையவழி அல்லது நேரடி முறையில் நடத்தப்படுமா என்ற குழப்பமும் நிலவியதால், மாணவர்கள் தேர்ச்சி குறைய காரணமாக இருந்ததாக பேராசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.