சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில்,  தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது.  தினசரி பாதிப்பு 1500ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழகஅரசு கடுமையாக்கி உள்ளன.  திருமணம், மத நிகழ்வுகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மால்கள் போன்றவற்றிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் முக்கவசம், சமூக இடைவெளி  கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலித்து வருகிறது.

இந்த நிலையில் கோவில்களில் நடைபெறும் திருமணத்திற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதித்து இந்து சமய அறநிலையத்துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,

 கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது.

கோயில் மண்டபங்களில் நடைபெறும் திருமணத்திற்கு  50 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடைபெற வேண்டும்.

மேலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

திருக்கோவில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள்

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.