சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் உள்பட பல்வேறு நிகழ்வுகளுக்கு கேபினட் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்  நடைபெற்றது. காலை  சரியாக 9.30 மணிக்கு தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் 11மணி அளவில் நிறைவேற்றது.

இந்த  அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. மேலும் கோவை மற்றும் பகுதிகளில் நடைபெற்ற பெட்ரோல் பாம்ப் வீச்சு, சட்டம் ஒழுங்கு நிலவரம், ஆர்எஸ்எஸ் பேரணி உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், அக்டோபர்  மாதம் கூட இருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் கொண்டு வருவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தி ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும்,  தமிழக சட்டப்பேரவை எப்போது கூடுவது என்ற தேதியையும் சபாநாயகருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.