டெல்லி: செப்டம்பர் 16 அன்று உலக ஓசோன் தினத்தையொட்டி  மத்திய அரசின் சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சார்பில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான இணையவழிப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.10 ஆயிரம்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 அன்று உலக ஓசோன் தினம் அனுசரிக்கப்படுகிறது.   ஓசோன் படலமானது சூரியனிடம் இருந்தும் வான் வெளியில் இருந்தும் வருகின்ற கதிர்வீச்சுகளில் இருந்து பூமியை பாதுகாக்கும் ஒரு பசுமைப் படலமாக இருக்கிறது. அனால், வளர்ந்து வரும்  தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப்புகைகளால் ஒசோன் படலம் பாதிக்கப்பட்டு வருகிறது.  இப்படிப்பட்ட ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்படுவதால் பூமியில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன; உயிரிகளின் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது; இதனால் மனிதர்களுக்கு தோல் புற்றுநோய், கண்புரை போன்ற பிரச்சனைகளும் ஏற்படக் கூடும். பூமியின் துருவ பகுதிகளின் ஓசோன் படலத்தில் துளை ஏற்படுவது இது முறையல்ல. அதை பாதுகாப்பது நமது முக்கியமான நோக்கமாகும்.

நடப்பாண்டு 28வது ஓசோன் தினம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வன, காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சார்பில் இணைய வழி போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

இந்த போட்டிகள் அனைத்தும் எப்போதும்போல மத்திய அரசு, இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என அறிவித்து உள்ளது. மாநில மொழிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

 போட்டிகள்  விவரம்:

(i) போஸ்டர் உருவாக்கும் போட்டி (ii) ஸ்லோகன் எழுதும் போட்டி (இந்தி அல்லது ஆங்கிலம் மட்டும்)

 தலைப்பு :

(i) போஸ்டர் உருவாக்கும் போட்டி:  ஓசோன் அடுக்கின் பாதுகாப்பு

(ii)  ஸ்லோகன் எழுதும் போட்டி:  (a) ஓசோன் அடுக்கின் பாதுகாப்பு  (b) உலக வெப்பமயமாதல்

பரிசுகள் :

  1. போஸ்டர் உருவாக்கும் போட்டி: முதல் பரிசு: ரூ. 10,000/-, இரண்டாம் பரிசு: ரூ. 7000/-, மூன்றாம் பரிசு: ரூ 5000/-, ஆறுதல் பரிசு: ரூ. 2002/- (மூன்று பேருக்கு)

குறிப்பு :

  1. ஒரு மாணவருக்கு ஒரு பதிவு மட்டுமே அனுமதி.
  2. பதிவு அவரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
  3. போஸ்டர் பதிவுகள் 22×13 இஞ்ச் அளவில் இருக்க வேண்டும்.
  4. பங்கேற்பாளர்கள் தங்கள் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், முழு அஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை மின்னஞ்சல் ஐடியுடன் பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன் பள்ளி முதல்வர்/ துணை முதல்வர்/ தலைமை ஆசிரியரின் பரிந்துரையை, கொடுக்கப்பட்ட படிவத்தில் நிரப்ப வேண்டும்.
  5. போஸ்டர் மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டியின் படைப்புகளை (ஒவ்வொரு பிரிவிலும் ஒன்று மட்டும்) https://moef.gov.in மற்றும் http://ozonecell.nic.in என்ற இணையதளத்தில் நேரடியாக பதிவேற்றலாம்.
  6. படைப்புகள் JPEG or PDF வடிவில், 5MB-க்கும் குறைவாக இருத்தல் வேண்டும
  7. தகுதியான படைப்புகளில் இருந்து சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்படும்.
  8. பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் 16 செப்டம்பர் 2022 அன்று நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

படைப்புகளை சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 05.09.2022 மாலை 5 மணி.

கூடுதல் தகவல்களுக்கு: http://ozone30mp.nic.in/ இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம்.