சென்னை: தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், புதிய கல்வியாண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில,  பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. இடையிடையே பள்ளிகள் திறக்கப்பட்டாலும் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டு,ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து தேர்வுகள் இல்லாமல்  தேர்ச்சி வழங்ககப்பட்டு வருகிறது. இதனால் மாணாக்கர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இதற்கிடையில், ஆன்லைன் வகுப்புகளின்போது, மாணவிகளுக்கு பாலியல் தொர்ந்து கொடுத்த நிகழ்வுகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இதையடுத்து, ஆன்லைன் கல்விக்கான புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்க தமிழக  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் ரெக்கார்டு செய்யப்பட வேண்டும், ஆசிரியர்கள் எவ்வாறு உடையணிய வேண்டும், ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றுதான் வகுப்பெடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு எப்போது தொடங்கலாம்  என்பதுபோன்ற பல்வேறு பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் ஸ்டாலினுடன் தலைமைச்செயலகத்தில் இன்று மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் +2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, குழுவில் யாரை இறுதி செய்யலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையில் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.