சென்னை: தமிழகத்தில்  கொரோனா பரவல் உச்சமடைந்துள்ள நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே காணொளி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.  கொரோனாவின் 2வது அலையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தமிழகஅரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.  இதைத்தொடர்ந்து நேற்று தலைமை நீதிபதியை, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உடன் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இன்றுமுதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய வழக்குகள் மற்றும் ஜாமீன் வழக்குகளில் மட்டும் அரசு வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற அனைத்து வழக்கு விசாரணையும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் எனவும் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 22ந்தேதி அன்று, கொரோனா சூழல் குறித்து ஆய்வு செய்து அடுத்தக்கட்ட அறிவிப்பு குறித்து  உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.