ஈரோடு:  தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து 10ந்தேதி அறிவிக்கப்படும் என்றும்,  நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பரவி வரும் செய்தி உண்மையல்ல என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பூங்கரைப்புதூரில் ரூ.67 லட்சம் மதிப்பில் 87 பயனாளிகளுக்கு கறவை மாட்டுக் கடன்  வழங்கும் விழா இன்று நடைபெற்றது.  நடைபெற்றது. அதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியளார்களிடம் பேசியவர்,  “அதிமுக  அரசு விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது, இதுவரை ரூ.250 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பள்ளிகள் திறப்பு, நீட் தேர்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், “நீட் தேர்வில் தமிழ்நாடு அரசின் கொள்கை என்பது தேர்வு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான். இதுகுறித்து தொடர்ந்து மத்தியஅரசிடம்  வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், தமிகத்தில் பள்ளிகள்  நவம்பரில்  திறக்கப்படும் என்று பரவிவரும் செய்திகள்  தவறானது என்று கூறியவர்,  பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என்று பலமுறை கூறிவிட்டேன்.  இது தொடர்பாக, பெற்றோர்களிடம் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

அரசு பள்ளிகளில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை குறித்து 10ம் தேதி  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்”  என்றும் கூறினார்.