சென்னையில் ஒரே நாளில் வெங்காய விலை ரூ.20-40 வரைக் குறைவு : மக்கள் மகிழ்ச்சி

Must read

சென்னை

சென்னை நகரில் வெங்காய விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை குறைந்துள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழையின் காரணமாக  வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அங்கிருந்து வரக்கூடிய வெங்காயம் வரத்து சரிந்தது. தமிழகத்தில் பெரிய வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்தது. சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.180  வரைக்கும், சாம்பார் வெங்காயம் விலை கிலோ ரூ.170 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தினமும். 70 லாரிகளில் தமிழகத்துக்கு வெங்காயம் கொண்டு வரப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்தது   இந்த வெங்காய விலை உயர்வு எதிரொலியாக உணவகங்களில் வெங்காயம்  பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது.

தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்துள்ளது   அத்துடன், பொதுமக்கள் வெங்காயப் பயன்பாட்டைக் குறைத்துள்ளனர். இதன் விளைவாகச் சென்னையில் வெங்காயத்தின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை குறைந்துள்ளது.

நேற்று சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் 170 ரூபாய் வரை விற்கப்பட்ட முதல் தர வெங்காயம் இன்று 130 முதல் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதைப்போல்  ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட நடுத்தர வெங்காயம்  100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் வெங்காயத்தின் அளவு மற்றும் தரத்தைக் கொண்டு 100 ரூபாய்க்குக் குறைவாகவும் ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயமும், கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. கிலோ 160 ரூபாய், 170 ரூபாய் என நேற்று விற்கப்பட்ட நிலையில் இன்று 130 ரூபாய், 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.   வியாபாரிகள்  வெங்காய விலை குறைவுக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரித்தது மட்டுமின்றி வெங்காயத்தின் பயன்பாட்டைப் பொதுமக்கள் குறைத்ததும் முக்கிய காரணம் எனவும் வரும் நாட்களில் மேலும் விலை குறைய  வாய்ப்புள்ளதாகவும் கூறி உள்ளனர்.

More articles

Latest article